அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, November 30, 2009

மொக்கை வாங்கலியோ மொக்கை:

இது மூணும் கவிதை
(ஒத்துக்காதவங்களுக்கு -
கேட்டுக்குங்க, இது மூணும் கவிதைதான்)

1. விருப்பம்

கணக்கு பாடம் என்றால்
எனக்கு
அல்வா சாப்பிடுவதுபோல்,
ஒரு பின்குறிப்பு:
எனக்கு சர்க்கரை வியாதி!

******************************
2. ஒரு ஒண்ணாங்கிளாஸ்(?!) கவிதை

ழகு முகத்தில்
யிரம் எண்ணம் தேக்கி
னிய புன்னகை
ந்திடும் பெண்ணே!
ன்னைக் கண்டதும்
ணினைத் துறந்து
ன்னை மறந்து
க்கம் கொண்டேன்
யமே இல்லை
ப்பற்றவள் நீ,
என் மானே!
(வளவுதான்.)

***********************
3. ஒரு நியாயமான கோபம்

ஏன் இந்த விடலைகள்
எல்லாம்
பெண்களைச் சுற்றி
வந்து தங்கள்
வாழ்க்கையை
மட்டுமல்லாமல்
அந்தப் பெண்ணின்
வாழ்க்கையையும்
வீணடிக்கிறார்கள் -
அயோக்கியப் பயல்கள்
என்ற எண்ணம் வந்தது
- என் பெண் காலேஜ்
சென்றுவரும்போது.
*******************************************************************************************************
காலத்தின் கோலங்கள்

காதலி:
கனவில் வந்து
தொல்லை கொடுக்கும்
இனிய பிசாசு
அவளே மனைவியானால் :
கனவிலும் வந்து
தொல்லை கொடுக்கும்
இல்லப் பிசாசு.

காதலன் :
குச்சி ஐஸ் கேட்டால்
ஐஸ் பார்லருக்கே
கூட்டிச் செல்வான்
அவனே கணவனானால் :
நகை கேட்கும்போது
புன்னகை இருக்க
பொன் நகை எதற்கு
என்று சமாளிப்பான்.

மகன் :
சரியான ஹிட்லர்டா
என் அப்பா என்பான்.
அவனே அப்பாவானபின்:
என் அப்பாகிட்ட
எனக்கு இருக்கும்
அன்பு
என் மகனுக்கு
அவங்கப்பாகிட்ட
இல்லையே என்று புலம்புவான்.

வாத்தியார் நாற்காலியில்
முள்ளை வைத்து விளையாடிய
மாணவன்
ஆசிரியரானபின்
சொல்லிக் கொடுப்பது
மாதா பிதா குரு தெய்வம்.

Saturday, November 28, 2009

பிடித்த பத்தும், பிடிக்காத பத்தும்.

நண்பர் கேபிளார் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.


1.அரசியல்வாதி
பிடித்தவர் : இன்னும் பிறக்கவில்லை

பிடிக்காதவர்: இன்னும் சாகலிங்கோ.

2. நடிகர்

பிடித்தவர் : சிவாஜி அல்ல (அவர் எங்கே நடித்தார்...............வாழ்ந்தல்லவா காண்பித்தார்)

பிடிக்காதவர் : ..........(சாரி, லிஸ்ட் கொஞ்சம் பெரிசு)

3. நடிகை

பிடித்தவர் : ..............(மனைவிகிட்ட மாட்டிக்க மாட்டேனே!)

பிடிக்காதவர் : பழம்பெரும் நடிகைகள் தவிர எல்லோருமே.

4. இயக்குனர்:

பிடித்தவர் : நிகழ்காலம் : பாலச்சந்தர்/பாக்கியராஜ் எதிர்காலம் : கேபிள் ஷங்கர் (ஜால்ரா இல்லீங்கோ.....)

பிடிக்காதவர் : டி. ஆர். (அவர் இயக்குனர் லிஸ்ட்ல இருக்காருல்ல.....?)

5. கவிஞர்

பிடித்தவர் : ஹி...ஹி... தன்னடக்கம் தடுக்குது.

பிடிக்காதவர் : நவரத்தினங்களில் இரண்டு சேர்ந்துள்ளவர்

6. எழுத்தாளர்

பிடித்தவர் : பட்டுகோட்டை பிரபாகர்

பிடிக்காதவர் : யாருமில்லை

7. இசையமைப்பாளர்

பிடித்தவர் : என்றென்றும் எம்.எஸ்.வி.

பிடிக்காதவர்: தேவா (ஒரிஜினல் கம்மி என்பதால்)

8. டி.வி. சானல்:

பிடித்தது : பொதிகை

பிடிக்காதவர் : போட்டி சானல்கள் எல்லாமே.

9. காமெடியன்:

பிடித்தவர் : மருத்துவர் (காமெடியன் சினிமாவுல மட்டும்தான் இருக்கணுமா?)

பிடிக்காதவர் : இப்போதைய விவேக்

10. பதிவர்

பிடித்தவர் : நம்ம பதிவைப் படிக்கும் எல்லோருமே.

பிடிக்காதவர் : பதிவைப் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம ஓடுறார் பாருங்க.......அவர்தான்!

ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..

டோண்டு

படுக்காளி

அடலேறு

எடக்குமடக்கு

Thursday, November 26, 2009

“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி...

ஒரு கதைப் போட்டிக்கு நான் அனுப்பியுள்ள என் கதை, இதோ:
மற்றவலைப்பதிவர்களும் தங்கள் கதைகளை அனுப்ப வேண்டுகிறேன்.

ஒருதலைக் காதல் - புதிரா புனிதமா?

"நீயெல்லாம் ஆம்பளையாடா?" நூறாவது முறையாக கேட்டான் ரமேஷ்.

"நான் என்னடா செய்யறது? ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கும்போது கேக்கனும்னு தோணுது, ஆனா, ....", இது சுரேஷ்.
"என்னடா ஆனா... இதப் பாரு, காதல் கூடாது, பண்ணிட்டா, அத சொல்றதத் தள்ளிப் போடக் கூடாது. புரியுதா?"
சுரேஷ் ஒரு பெண்ணை (அவ பெயர் கூட தெரியாது) ஒருதலையாகக் காதலித்துக் கொண்டு வருகிறான். அவளை முதன் முதலில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் சந்தித்தான், அவன்.
************
ஒரு ஆறு மாதத்திற்கு முன், ஒரு நாள், அவனுக்கு எல்லாமே ஏமாற்றம் தருவதாகவும், அவநம்பிக்கையாகவும் இருந்தது. இருக்கும் வெறுப்பில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட யோசித்த்துக் கொண்டிருந்தான். விதியை எண்ணி வருந்திக் கொண்டிருந்தவன் கண்ணில் மின்னல் போல் தென்பட்டாள் அவள். பவுர்ணமி நிலவைப் போன்ற அழகிய வட்ட முகமும் அகன்ற படபடக்கும் கண்களும், சற்று உப்பல் கன்னங்களுடன் திருத்திய மூக்கும்.....ஒரு ஆடவனின் கண்ணை இழுக்கக் கூடிய அத்தனை அம்சங்களும் அவளிடம் இருந்தன.

அந்த ஒரு நொடிப் பொழுதில் உலகில் உள்ள அத்தனை செல்வங்களும் தனக்கே சொந்தமானது போல் சுரேஷின் உள்ளம் குதூகலித்தது. அவளைச் சந்தித்த கண்கள் இனி மற்றோருத்தியைக் கண்டு மயங்குமா என்று உள்ளம் பேதலித்தது. அதற்குள் அவள் எதிர்பார்த்திருந்த பேருந்து வந்து விடவும் அவள் பஸ்ஸில் ஏறிவிட்டாள். அன்றே இவன் மனத்திலும் ஏறிவிட்டாள்.

அதன்பின் ஒவ்வொரு நாளும் அந்தப் பேருந்து நிலையத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டான், சுரேஷ். விவரமறிந்த ரமேஷும் அவன் கூட அங்கு வந்து விடுவான். "மாப்ள, உன் செலக்சன் சூப்பர், உனக்கு எத்த பொண்ணுதான்", என்று காதலை ஊக்குவித்தவனும் அவன்தான்.
**********

"என்னடா, யோசனை? இங்க பாரு, நீ நல்ல வேலையில் இருக்க, ஆள் பார்க்கவும் அம்சமாத்தான் இருக்க, நேர போய், அவகிட்ட உன் காதலைச் சொல்லிடு."
"நீ சொல்றதும் சரிதாண்டா, நானும் அவகிட்ட அதப் பத்தி பேசலாம்னுதான் பார்க்கிறேன், அவ மாட்டேன்னு சொன்னாக் கூட பரவாயில்லை, ஆனா, இதுனால, தினம் கிடைக்கற அவ தரிசனம் கூட கிடைக்காம போயிட்டா என்ன செய்றதுன்னு தான் தயக்கமா இருக்கு" என்றான் சுரேஷ்.
"சீ, முட்டாள்! உன் தயக்கத்தில கொள்ளி வைக்க! ஒன்னு அவகிட்ட போய் உன் மனசில இருக்கிற காதலைச் சொல்லு, இல்ல, என்ன மாதிரி தூரத்தில இருந்து ரசிக்கிறதோட மட்டும் இருந்துடு. இப்படி இருதலைக் கொள்ளி இரும்பா இருக்கற உன்னைப் பார்த்து கோவம், கோவமா வருது" திட்டிவிட்டு போய்விட்டான் ரமேஷ்.
உண்மைதான், ரமேஷும் சுரேஷைப் போல் பார்க்க வசீகரமானவந்தான், ஆனால், காதல் கத்தரிக்காய் என்று வலையில் விழாமல், வெறும் சைட் அடிப்பதோடு சாமர்த்தியமாக காலத்தைக் கழிப்பவன் அவன்.
**********
இன்று எப்படியும் தன் காதலைச் சொல்லிவிடுவது என்ற மனத்துணிவுடன், பேருந்து நிறுத்தத்திற்கு வந்தான் சுரேஷ். ரமேஷ் எதோ வேலையாக வெளியூருக்குச் சென்றிருந்ததால் அவன் வரவில்லை. வழக்கமான நேரத்திற்கு அவனுடைய தேவதை வந்தாள், அன்று அவனுக்குப் பிடித்த நீல வண்ணச் சேலையில் வந்தது தற்செயலா அல்லது அவன் மன ஓட்டம் அவளுக்குத் தெரிந்து விட்டதா என்று ஒரு சந்தோஷக் குழப்பம் சுரேஷுக்கு. அது மட்டுமின்றி அவள் அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோலவும் தோன்றியது. அவள் பஸ் வந்ததும், இவனும் ஏறிக் கொண்டான். அவள் செல்லும் இடத்திற்கே டிக்கெட் எடுத்தான். எப்படிப் பேசுவது என்று மனத்திற்குள் ஒத்திகையும் பார்த்துக் கொண்டான். அவள் இறங்கினாள், இவனும் இறங்கிவிட்டான். அவளும் இவனைக் கவனித்துவிட்டால், மெதுவாக நடந்து கொண்டிருந்தவள் பக்கத்தில் போய், ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் சென்று, "ஹ...." என்பதற்குள் அவளே "ஹலோ" என்றாள். இவன் கால் தரையில் இல்லை.

"கிட்டத் தட்ட ஒரு ஆறு மாசமா உங்களை பார்க்கிறேன்", இவன் வானில் பறந்தான்.
"உங்க கூட ஒரு ப்ரெண்டும் இருப்பாரே" அவள் கேட்க, இவன் வியந்தான் ("அட, அதையும் கவனிச்சாளா")
"இத எப்படி சொல்றதுன்னு தெரியல, வந்து, நீங்க என்னைத் தப்பா நினைக்கலைன்னா,....."இவன் மேகத்தின் ஊடே மிதந்தான். கைப்பையைத் திறந்தவள், ஒரு கவரை எடுத்தாள். அவனிடம் கொடுத்தாள், "இந்த கவரை உங்க நண்பரிடம் கொடுக்கிறீங்களா?"
"இதுல என்ன இருக்கு?" குழப்பமாகக் கேட்ட சுரேஷிடம்,
"லவ் லெட்டர். நான் அவரை லவ் பண்றேன்," என்றாள்.
***********

நீதி: கண்ணா, சிங்கம் மட்டுமில்ல, பன்னிகூட "சிங்கிளா" வந்தாதான் காதல் கைகூடும், பிரென்டக் கூட்டிகிட்டு வந்த, நீ தூதுவன்தான், இது எப்டி இருக்கு?

Monday, November 23, 2009

வாழ்க்கை - கோபப் படாதே சகோதரா.....(தொடர்ச்சி)

என்னுடைய முந்தைய கட்டுரையைப் படித்து விட்டு சில நண்பர்கள் சில கேள்விகளை எழுப்பினார்கள்.

நீங்கள் எழுதியதெல்லாம் சரிதான். ஆனால் இதெல்லாம் நடைமுறையில் ஒத்து வருமா? அதிலும் குறிப்பாக நடுத்தெரு சண்டையில் போலீஸ் ஸ்டேஷன் போய் சாட்சி சொல்வது ரொம்ப ஓவர். அப்படி இப்படி என்றெல்லாம் சொன்னார்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் எல்லோரையும் அப்படி செய்யச் சொல்லவில்லை. அநியாயத்தைக் கண்டு பொங்குகிறேன் பேர்வழி என்று நடுத் தெருவில் தானும் கோதாவில் இறங்க நினைப்பவர்களுக்குத் தான் அந்த அட்வைஸ். உங்கள் சினத்தை நடுத் தெருவில் வெளிப்படுத்தக் கூடிய துணிவில் பாதி அளவு இருந்தால் போதும், போலீஸ், சாட்சி இதெல்லாம் சமாளிக்க முடியும்.
இதற்கு மேலும் சந்தேகம் இருந்தால், டிராபிக்_ராமசாமியைப் பாருங்கள். தன்னால் அந்த துணிவு வரும்.


நிற்க, நாம் நம் கட்டுரையைத் தொடருவோம்.

முந்தைய கட்டுரையில் அநேகமாக சினத்திற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டோம். சரி, சினத்தை ஏன் தவிர்க்க வேண்டும்?

உங்கள் சினம் முதலில் உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும். அறிவியலாகப் பார்க்கும் பொழுது, நாம் கோபப் படும்போழுது, நம் இதயம் வேகமாக துடிக்கிறது. இதனால், நம் B.P. ஏறுகிறது. BP ஏறுவதால், நமக்கு படபடப்பு அதிகமாகி, கோபம் இன்னும் அதிகமாகிறது. நம்முடைய வார்த்தைகளும், செயலும் நம் கை மீறிப் போய்விடுகின்றன. இதனால் வார்த்தைகள் தடித்து, எதிராளியின் egoவை கிளறுகிறது. விளைவு, நியாயமாக வருத்தப் பட வேண்டிய எதிராளி அவர் பங்குக்கு கோபப் பட்டு கைகலப்பில், சில சமயம் கொலையில் கூட முடிகிறது. எனவே, நம்முடைய சினம் நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு கேடாகிறது

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
(பொருள் : சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மட்டுமின்றி மன மலர்ச்சியும் போய் விடும், சினத்தை விட ஒரு பகை இல்லை)
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
தன்னையே கொள்ளும் சினம்
(பொருள்: ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் சின்னம் கொள்ளாமல் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த சினம் அவனையே கொன்று விடும்)
என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அது மட்டுமின்றி, சினம் நம்முடைய உற்றார் உறவினர்களைக் கூடப் பாதிக்கும்.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
(பொருள்: சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்)
என்று இதைப் பற்றியும் திருக்குறள் கூறுகிறது. எனவே, உங்கள் சினத்தைக் கட்டுப்படுத்துவது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவசியமாகிறது அல்லவா?

சரி, கோபத்தை எப்படிக் கட்டுப் படுத்துவது?

முதலில் சொன்னது போல், கோபப் படுவதற்கு முன், சற்று யோசித்துப் பாருங்கள், இந்த விஷயத்திற்கு கோபப் படுவது நல்லதா? அந்த கோபத்தின் மூலம், நடந்ததைச் சரி செய்ய முடியுமா? அல்லது, நம் கோபத்தை சற்று நாசூக்காக வெளிப் படுத்த முடியுமா? இப்படியெல்லாம் யோசிக்கும் போதே, நிகழ்ச்சியின் தாக்கம் கொஞ்சம் குறைந்து கோபமும் குறைந்துவிடும்.

சரி, கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டீர்களா? உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் நடந்ததை எண்ணிப் பாருங்கள். தவறு யார் மீது என்று இப்போது புரியும். தங்கள் கோபம் அநியாயமானது என்று புரிந்து கொள்வீர்கள். உடனடியாக சம்பந்தப் பட்ட நபரை தொடர்பு கொண்டு கோபத்திற்கு வருத்தம் தெரிவியுங்கள், அவர் மீதே தவறு இருந்து, உங்கள் மன்னிப்பையும் அவர் உதாசீனப் படுத்தலாம். ஆனால், உங்கள் மனம் இப்போது நிச்சயம் அமைதியாகி விடும். முதலில் சிறு தயக்கங்கள் இருந்தாலும், நாளடைவில் இந்தப் பழக்கம் உங்களை கோபமற்றவராக மாற்றி விடும்.

ஆக, கோபத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம்,

நம் மன, உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும், நம்மைப் பற்றிய ஒரு உயர்ந்த அபிப்ராயம் பிறரிடம் நிலவும்.

வாருங்கள், கோபமில்லாத உலகத்தைப் படைப்போம்.

டிஸ்கி: "நான் ரொம்ப சாது, எனக்கு கோபம் வராது. என்னை விடுங்க"ன்னு சொன்னவங்களை கூப்பிட்டு படிக்கச் சொன்னீங்களே, அவங்களுக்கு ஒண்ணுமே சொல்லலையே, அது ஏன் என்று கேட்பவர்களுக்கு, "உங்களுக்குத்தான் கோபமே வராதே, அதுனால, உங்களுக்குன்னு எதுவும் சொல்லல, ஓ.கே. வா?"

(சரி, சரி, படிச்சதுதான் படிச்சீங்க, கோபப்படாம கமெண்ட் சொல்லிட்டு போங்க!)

Saturday, November 21, 2009

வாழ்க்கை - கோபப் படாதே, சகோதரா........!

"அவர் பெரிய டெரர் தெரியுமா, ஒரு பய அவர்கிட்ட நெருங்க முடியாது. சும்மா கடிச்சு கொதறிடுவார் தெரியுமில்ல?" என்று உங்களைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்களா? உங்களுக்காகத்தான் இந்த பதிவு, கொஞ்சம் கோபப்படாம, படிச்சுட்டுப் போங்க.

"நான் அப்படியெல்லாம் கிடையாது, சார். நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருக்கேன், நான் பரம சாது, எனக்கு சுட்டுப் போட்டாலும் கோபம் வராது, என்னை விடுங்க" என்கிறீர்களா? நில்லுங்க, சார், உங்களுக்கும் சேர்த்துதான் இந்த பதிவு, படிச்சுட்டு போங்க.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு, அப்படித்தான் சமுக அறிவியல் நம்மைப் பேசுகிறது. எனவே, நாம் தனிப்பட்ட முறையில் எதைச் சிந்தித்தாலும், செய்தாலும், அது நம்முடைய சூழலைப் பாதிக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் நம்முடைய கோபம் எந்த அளவுக்கு மற்றவரையும் நம்மையும் பாதிக்கிறது என்பதுதான் இந்த பதிவின் உள்ளடக்கம்.

பொதுவாக, ஒரு மனிதனுக்கு எப்பொழுது எல்லாம் கோபம் வருகிறது என்பதை ஆராய்ந்தால்,

1 நம்முடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக எதுவும் நிகழ்ந்து விட்டால்,
2 நாம் எதிர்பார்த்த ஒன்றை ஒருவர் செய்யத் தவறி விட்டார் என்றால்
3 நம் கண் முன்னால் ஒரு அநியாயம் நடக்கிறது என்றால்,
4 நாம் சொன்னதை யாரும் கேட்க வில்லை என்றால்
இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு மன்னன் தன் அரசவைப் புலவர் செய்த ஒரு தவறுக்காக, அவருக்கு மரண தண்டனை கொடுத்து விட்டான். புலவர் எவ்வளவோ மன்றாடியும் மன்னன் தன் தீர்ப்பை மாற்றுவதாக இல்லை. யோசித்த புலவர், "மன்னா, நான் ஒரு வருடத்துக்குள் உங்கள் குதிரையைப் பறக்க வைக்கிறேன். அப்படி செய்ய முடியாவிட்டால், ஒரு வருடம் கழித்து என்னை கொன்று விடுங்கள்" என்று வேண்டினார். மன்னன், "அது எப்படி உங்களால் என்னுடைய குதிரையைப் பறக்க வைக்க முடியும்" என்று கேட்க, புலவர் தன்னால் நிச்சயமாக முடியும் என்று உறுதி கூறினார், மன்னனும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான்.

வீட்டுக்கு வந்த புலவர் மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார். மனைவி மிகவும் பயந்து போய், "உங்களால் குதிரையைப் பறக்க வைக்க முடியுமா?" புலவர் சிரித்தார்.
"இதோ பார், இந்த ஒரு வருடத்துக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேளை மன்னர் தன் மனத்தை மாற்றிக் கொள்ளலாம், அல்லது, நான் இயற்கையாகவே இறந்து விடலாம், அல்லது மன்னர் இறந்து விடலாம், அல்லது அந்த குதிரை இறந்து விடலாம், அவ்வளவு ஏன், அதற்குள் குதிரைக்கே பறக்கும் சக்தி வந்து விடலாம், எப்படி இருந்தாலும், ஒரு வருடத்திற்கு கவலை இல்லை அல்லவா?"

இந்தக் கதை மூலம் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே தெரியாத இந்த உலகத்தில், எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி நடக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். நம்முடைய விருப்பத்துக்கு மாறாக ஒன்று நடக்கிறது என்றால், நாம் கோபப் படுவதன் மூலம், அதை நேர் படுத்தி விட முடியாது. அது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாமே என்றால், மன்னிக்கவும், கோபப் படுவதன் மூலம் எந்த தவறையும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், உங்கள் கோபம் மூலம், அந்த (so called) எதிரியை உசுப்பி விடுகிறீர்கள், எனவே, உங்களை வெறுப்பேற்றுவதற்காகவே, அவர் மீண்டும் அந்த செயலை செய்வார்.

மாறாக, அவர் எதனால் அப்படி நடந்தார், அந்த காரியத்தின் விளைவாக, உங்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்னென்ன, அவர் மீண்டும் அவ்வாறு செய்யாமல் இருக்க எப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் நீங்கள் யோசிக்க ஆரம்பித்தால், அதன் விளைவுகள் நிச்சயம் சுமுகமாகவே இருக்கும்.

அது மட்டுமல்லாமல், அவருடைய அந்த செய்கை, நமக்கு வேறு ஒரு விதத்தில் மிகவும் நன்மையாகவும் முடியக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.

எனவே, கோபத்தை விடுங்க, கூ..............ல்.

அதே போல், நம் கண் முன்னால் ஒரு அநியாயம் நடக்கும்போது, நம் மனம் பதறுவது இயற்கை. கோபம் வருவதும் இயற்கை. ஆனால், அந்த கோபத்தின் விளைவாக நாம் எடுக்க வேண்டிய நடிவடிக்கை கூட இன்னொரு அநியாயமாக மாறிவிடக் கூடாது. உதாரணமாக, நம் முன்னால் ஒரு ரவுடி ஒருவரை அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம், உடனே, நாம் ஒரு சினிமா நட்சத்திரமாக மாறி, அந்த ரவுடியை துவம்சம் செய்ய நினைப்பது கூடாது. (அது சினிமாவில் மட்டுமே நடக்கக் கூடிய சாத்தியம் என்பது வேறு விஷயம்). அது சட்டத்தை நம் கையில் எடுத்துக் கொண்டது என்றாகிவிடும்.

அதற்காக, "இந்த உலகம் உருப்படாது, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகி விடுகிறான், இந்த ஆட்சியோட லட்சணமே இதுதான்,'' என்றெல்லாம் புலம்பிக் கொண்டு வேறு வழியில் சென்று விடுவதும் கூடாது. காவல் துறைக்கு விஷயத்தைத் தெரியப் படுத்தி, முக்கியமாக, அவர்கள் விசாரணை என்று வரும்போது, முன்னின்று சாட்சி சொல்ல வேண்டும்.

சுருங்கச் சொன்னால், அநியாயம் நடக்கும்பொழுது பாய்ந்து கொண்டிருக்கவும் வேண்டாம், பயந்து ஒதுங்கவும் வேண்டாம். தேவை இல்லாத சினத்தை வெளிப்படுத்தவும் வேண்டாம்.

(.....தொடர்ந்து சிந்திப்போம்)

Monday, November 16, 2009

2012 - சில பகீர் தகவல்கள்

ரெல்லாம் 2012 பத்தி தான் பேச்சா இருக்கு. நம்ம வலைப்பூவில இது பத்தி எழுதலைன்னா அகில உலக பகீர்,திடீர்,உசார்,டகால்டி சித்தர் சங்க எதிர்ப்புக்கு ஆளாக வேண்டுமோ என்று எனக்குள் ஒரு பச்சி சொல்லியதால் இந்த பதிவு. அகத்தியர் முதலிய நிஜமான சித்தர்கள் மன்னிப்பார்களாக!

2012 ல் என்ன நடக்கும்?


இன்னைக்கு மதியம் என் கனவுல வந்த காரண காரிய கலக (கழக அல்ல) சித்தர் சொன்னது இது:-

1. உலகம் பூரா எல்லாரும் பயன்படுத்தற காலண்டர்ல வருஷம் 2012 என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

2. ஜனவரி ஒன்றாந்தேதி அன்னிக்கு புத்தாண்டு கொண்டாடற பெரும்பாலான மக்கள் தினமும் ஒரு நாளை இழந்து கொண்டுதான் இருப்பார்கள்.

3. சரியா பதினஞ்சு நாள் கழிச்சு "இந்திய தொலைக்காட்சியில் முதன் முறையாக" பல தொல்லைக்காட்சிகளில் புது படம் போடுவாங்க.

4. தமிழ் நாட்டில சில பேர் அன்னிக்கு தமிழ் புத்தாண்டும் பலர் பொங்கல் பண்டிகை மட்டும் கொண்டாடுவாங்க.

5. தினமும் காலையில் கிழக்கே உதிக்கும் சூரியன் மாலை வந்ததும் யாருமே எதிர் பார்க்கும் வண்ணம் மேற்கில் மறையும். அதே வேளையில் மாதத்தில் சில நாட்கள் தவிர இரவுப் பொழுதில் சந்திரனைக் காணலாம்.

6. "அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலோடும், பிரதமர் மன்மோகன் சிங்க் தலைமையிலும் எங்கள் அரசு நிச்சயம் ஐந்தாண்டு காலம் நிறைவு செய்யும்" என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் பேட்டி அளிப்பார். (தலைவர் யாருங்கறத எந்த சித்தராலும் சொல்ல முடியாது - கனவுல வந்த சித்தர்)

7. "விரைவில் தமிழ் நாட்டில் காமராஜர் ஆட்சி மலரும்" என்று திரு இ.வி.கே.எஸ். இளங்கோவன் அவ்வப்போது பேட்டி அளிப்பார்.

8. "விரைவில் தமிழர்கள் அவர்கள் சொந்த இடங்களில் குடி அமர்த்தப் படுவார்கள்" என்று இலங்கை குடியரசு தலைவர் அறிவிப்பார்.

9 "தமிழ் நாட்டில் பூரண மது விலக்கு கொண்டு வரப் பட வேண்டும்" என்று திரு. ராமதாஸ் வேண்டுகோள் விடுப்பார்.

10. ஜனவரி 25 ந்தேதி அன்று இரவு டி.வி.யில் தோன்றும் இந்திய ஜனாபதி நாட்டில் நிலவும் வறட்சி, வேலை இன்மை குறித்து கவலை தெரிவிப்பார்; மக்கள் அனைவரும் உழைத்து இந்த நிலை மாற அவர் வேண்டுகோள் விடுப்பார்.


11. இதே கவலையை பிரதமர் தன்னுடைய சுதந்திர தினப் பேருரையில் ஆகஸ்ட் 15 அன்னிக்கு வெளியிடுவார், வேண்டுகோளும் விடுப்பார். தீவிரவாதத்தை தனது அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதையும் குறிப்பிடுவார்.


மற்ற பல பகீர் தகவல்கள் அடுத்தமுறை அவர் என் கனவில் வரும்போது சொல்வதாக சொன்னார். அனேகமாக, நிறைய மக்கள் கனவிலும் அவர் வந்திருப்பார், சில தகவல்கள் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன், கேட்டவர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

Sunday, November 15, 2009

மத நல்லிணக்கம்

மனிதன் வாழும் வகையைக் கூறும்
வழிமுறை அதுவே மதமாகும்.

புனிதம் என்பது புத்தியைத் தீட்டி
புதுமை காணும் விதமாகும்.

இயேசு, நபிகள், நானக் என்று
எத்தனை விதமாய்த் தூதர்கள்
- இறை தூதர்கள்
பேசும் உண்மை எதுவெனக் கேட்டால்
பெரிதோர் உண்மை விளங்கும்.

"என்னை அறிந்தவன் என்னை அடைவான்"
இதுவே கீதையின் சுருக்கம்

"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்"
இதுவே பைபிளின் விளக்கம்

இவ்விரண்டில் என்ன கண்டோம் வேறுபாடு
இரண்டுக்கும் இடையில் உண்டோ மாறுபாடு?

இறைவன் ஒருவன் இருக்கின்றான்
என்றும் நம்மைக் காக்கின்றான்
மறைகள் இதுவே சொல்லும்
மறவோம் இதனை என்றும்.

மதங்கள் இல்லா மனிதர்கள்
கரைகள் இல்லா நதிகள்
கரைகள் நதியை வழிப்படுத்த!
மதங்கள் மனிதனை நெறிப்படுத்த!

மரம் வளர்ப்போம்
மழை வரும்
வளம் வளரும்.

மனிதம் வளர்ப்போம் - அது
மனிதனை வளர்க்கும் - சக
மனிதரை வளைக்கும்
சுகத்தை அளிக்கும் - அகிலமே
அன்பில் திளைக்கும்.

மதவெறியும் வேண்டாம் - பிற
மத வெறுப்பும் வேண்டாம் -
இரண்டுமே மனிதரைக் கொல்லும்
இதுவே மறைகள் சொல்லும்.

சக மனிதரைக் கொன்று குவிக்கும்
மதவெறி
; அது மனித வெறி!
அல்ல, அல்ல, மிருக வெறி!

மனிதரை மனிதராக்கும் ,
சற்றும் மேலே
புனிதராக்கும் மதம் எம்மதம்
அதுவே நமக்கு சம்மதம்.

மதவெறி உலரட்டும்
மனித நேயம் மலரட்டும்
இனிய பொழுது புலரட்டும்
அகிலமே களை கட்டட்டும்
அன்பின் களை சொட்டட்டும்!

Sunday, November 8, 2009

கதை - கண்ணால் காண்பதும்........

"அப்போ நீ என்னதான் சொல்றே?" முடிவாகக் கேட்டார் கோபால். கோடீஸ்வரக் களை அவருடைய ஒவ்வொரு அங்கத்திலும் சொட்டியது.இரு கைகளிலும் கட்டை விரல் தவிர எட்டு விரல்களிலும் வைர மோதிரம் சிரித்துக் கொண்டிருந்தது. போட்டிருந்த கோட்-சூட் நிச்சயமாக மேல் தட்டு வர்க்கத்தவரால் மட்டுமே வாங்கி வைத்துக் கொள்ள முடியும்.

எதிரே நின்றிருந்த சுரேஷ் ஒரு அப்பட்டமான நடுத்தர வர்கத்தினனாகத் தெரிந்தான். ஒரு தனியார் நிறுவனத்தில் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் கணக்காளனாக வேலை பார்த்து வருகிறான். "மன்னிக்கணும் சார், நான் உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன். உங்க பெண்ணும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறா. இதுல எந்த மாற்றமும் இல்ல".

"டாமிட்! என் சொத்து மதிப்பு தெரியுமா உனக்கு? நீ வாங்கற சம்பளத்துக்கு என்னோட ஒரு கால் ஷூ வாங்கிடலாம். என் வீட்டு நாய்க்கு நான் வாங்கிப் போடற பிஸ்கட் கணக்கே ஒரு மாசத்துக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும்.".

"நான் காதலிக்கறது உங்க பொண்ணைத் தானே தவிர உங்க சொத்த இல்ல, சார். என்னால் அவளுக்கு மூணு வேளை சோறு போட்டு வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கு. அது போதும்".

"கிழிச்சே! வீட்டு வாசலுக்கு வந்தா, எந்த கலர் காருல போலாம்னு யோசிக்கற பணக்கார வீட்டு பொண்ணு என் மக. உன் கூட வந்தா அவளுக்கு ஒரு வேளை கூட ஒரு யுகமாத் தான் தெரியும்."

"அதை உங்க பொண்ணுதான் சொல்லணும், சார்"

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகத் தான் இருவரும் காதலித்து வருகிறார்கள் இருவரும். ஆரம்பத்தில் மோதலாகத் தொடங்கியது, நாளாவட்டத்தில் காதலாக மாறியது.

"சோ, என் மகளை நீ காதலிக்கிறே, எந்தக் காரணம் கொண்டும் அவளை நீ மறக்கறதா இல்ல, அதானே?"

"நிச்சயமா, அதில எந்த மாற்றமும் இல்ல" உறுதியாகச் சொன்னான், சுரேஷ்.

"இங்கே பார், நான் யார்கிட்டயும் இவ்வளவு நேரம் வாதாடினது இல்ல, எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம். இருந்தாலும், ஏன் இப்படி உன்கூட மல்லு கட்டறேன்னா, எனக்கு என் மகளோட வாழ்க்கை முக்கியம்."

"எனக்கும் தான் சார், உங்க மகளோட வாழ்க்கை முக்கியம்" தெளிவாகச் சொன்னான், சுரேஷ்.

"அநாதை நாய் நீ, அடிச்சுப் போட்டா கூட கேள்வி கேக்க யாருமே இல்ல, உனக்கு இவ்ளோ திமிரா?" உறுமினார் கோபால்.

"இதோ பாருங்க, சார், நான் அனாதைதான். அப்படியே அடிச்சுக் கொன்னு போடலாம்தான், அப்புறம் ஏன் தாமதிக்கிறீங்க, என்னைக் கொன்னு போட்டாலும் என்னால் உங்க மகளை மறக்க முடியாது".

"ஓகே, ஓகே. இத பார், நான் உனக்கு அம்பது லட்ச ரூபாய் தர்றேன். எங்கயாவது போய் பிழைச்சுக்க! நான் என் மகளைச் சமாளிச்சுக்கிறேன். என்ன சொல்ற?"

மெளனமாக யோசிக்க ஆரம்பித்தான் சுரேஷ்.

"என்ன யோசிக்கற? இன்னிக்கு ராத்திரியே நீயும் என் மகளும் ஓடிப் போக திட்டம் போட்டது எனக்கு தெரியும். ஒரு தகப்பனா அதை என்னால் ஜீரணிச்சுக்க முடியலை. அதுதான் உன்னை வரவழைச்சுப் பேசிக்கிட்டு இருக்கேன். ஐம்பது லட்சம், உன் வாழ்நாள்ல பார்க்க முடியாத தொகை, ஒகேவா?"

சற்று நேரம் பொறுத்து சுரேஷ் பேசினான், "ஓகே சார், நீங்க சொல்றது நியாயமாத் தான் தெரியுது. நான் நீங்க தர்ற பணத்தை வாங்கிக்கிறேன்"

"பணத்தை வாங்கிட்டு மனசு மாற மாட்டியே" சிரித்தார் கோபால்.

"சார், அவ்வளவு பணம் வாங்கிட்டு உங்களுக்கு துரோகம் பண்ண முடியுமா, அப்படியே பண்ணிட்டு உங்களை மீறி வாழ முடியுமா?"

"வெரி குட்! ஐ லைக் யுவர் ரியாக்ஷன்", சந்தோஷமாகக் கூறியவர் பீரோவைத் திறந்து ஐந்நூறு ரூபாய்க் கட்டுகளை டேபிளில் வைத்தார். பணத்தை எண்ணி அவர் கொடுத்த சூட்கேஸைக் கைகளில் வாங்கினான் சுரேஷ்.

நிமிடங்களில் வெளியேறினான்.

சுரேஷ் வெளியேறியதை உறுதி செய்து கொண்ட கோபால் பக்கத்து ரூம் பக்கம் பார்த்து, குரல் கொடுத்தார், "உமா!".

உமா ரூமிலிருந்து வெளியே வந்தாள்.

"பார்த்தியா, உன் அருமை காதலனை, அவனை அனாதைன்னு திட்டியதைக் கூடப் பொறுத்துக் கொண்டவன், பணம்னவுடனே, மனசு மாறிட்டான். இவனை நம்பியா உன் எதிர்காலத்தைப் பாழாக்கிக்கப் போறே?" அமைதியாகக் கேட்டார், கோபால்.

"சாரிப்பா, உங்களுக்குத் தெரியாம பெரிய தப்பு செய்யத் தெரிஞ்சேன். அவனோட சுய ரூபம் தெரியாம போச்சு." உடைந்து அழ ஆரம்பித்தாள் உமா.

"இட்ஸ் ஓகே மா, இப்பவாவது உன் அப்பா உனக்கு நல்லது தான் செய்வார்னு நம்பு, என் பிசினெஸ் பார்ட்னர் மூர்த்தியின் பையனை உனக்கு பேசி இருக்கேன், நீ பார்த்து உன் முடிவைச் சொன்னா போதும்."

"அதெல்லாம் வேண்டாம்பா, நீங்க பார்க்கிற பையனை நான் கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன்" தீர்மானமாகச் சொன்னாள் உமா.

*********

இரவு பன்னிரண்டு மணிக்கு பஸ் ஸ்டாண்டில் கையில் சூட்கேசுடன் நின்று கொண்டிருந்தான் சுரேஷ்.

"ரொம்ப நல்லதா போச்சு. உமாவோட அப்பாகிட்ட என் வீரத்தைக் காட்டியிருந்தா, அவர் ஆளை வச்சு என்னைக் கொன்னு போட்டிருப்பார். நல்ல வேளையாக அவர் பணத்துக்கு ஆசைப் படற மாதிரி, அவர் கொடுத்த பணத்தை வாங்கிகிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உமா வந்துடுவாள். அவளோட எதாவது ஒரு கண் காணாத ஊருக்குப் போய் இந்த அம்பது லச்ச ரூபாயை வைத்து ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்க வேண்டியதுதான்".

நெஞ்சு நிறைய கனவுகளுடன் சந்தோஷமாக நின்றிருந்தான் சுரேஷ், தான் ஏமாந்தது தெரியாமல்.

Saturday, November 7, 2009

வாழ்க்கை - உதவி வரைத்தன்று ........

என்னுடைய வலைப்பூவில் முதலில் பின்னூட்டம் போட்டவர் என்ற முறையில் நண்பர் கோபியின் எடக்குமடக்கு வலைப்பூவைத் தான் முதலில் படிப்பது வழக்கம். அந்த வலைப்பூவில் வாழ்க்கை பற்றி தன் கருத்துக்களை இங்கே (ஒன்று, இரண்டு , ) பதிவிட்டு வருகிறார்.
எனக்கும் வாழ்க்கையின் சில சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டு என் கருத்துக்களை எழுத வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதால், இதோ...

"யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா, போங்க" என்று கண்ணதாசன் வரிகளை நடிகர் திலகம், TMS குரலில் கர்ஜிப்பாரே, நினைவிருக்கிறதா? நாமும் அந்தக் காட்சியை மிகவும் ரசித்திருப்போம். ஆனால், உண்மை தெரியுமா, இருவர் (ஆணும், பெண்ணும்) உதவியுடன் பிறப்பது முதல் நால்வர் உதவியுடன் பிணமாய்ச் செல்வது வரை, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு மனிதனுக்கு உதவி தேவைப் படுகிறது.

"நான் எதிர் பாராமல் கிடைத்த உதவிகள் தான் அவை, நாம் வருவதற்கு முன்னும், நான் இறந்ததற்கு பின்னும் கிடைக்கும் உதவிகள் பற்றி தேவை இல்லை, நான் வாழும் போது எனக்கு எவருடைய உதவியும் தேவை இல்லை" என்று கூறுகிறீர்களா? வருகிறேன்.

உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள், காலை பல் விளக்குவது முதல் உங்களுக்குத் தேவையான பொருட்களை (பிரஷ், தண்ணீர், ஒரு பிளாஸ்டிக் குவளை) நீங்களா உருவாக்கினீர்கள்? கடையில் காசு கொடுத்து வாங்கினீர்கள் என்றாலும் அவற்றை உருவாக்குபவர்கள் இல்லை என்றால், எத்தனை காசு செலவழித்தால் என்ன, உங்களுக்கு தேவையான பொருட்கள் உங்களுக்கு கிடைக்காது.

அப்படியானால், அது அவர்கள் உங்களுக்கு செய்யும் உதவிதானே?

சரி, காசு பணம் எப்படி வருகிறது? யாரோ, எப்போதோ சேர்த்து வைத்த சொத்தாக இருக்கும் அல்லது, உங்கள் முதலாளி உங்கள் உழைப்புக்கு கொடுக்கும் வெகுமதியாக இருக்கும். அதேபோல், பொருட்களை உருவாக்குபவர்கள், பணம் போடும் முதலாளி ஆகியோருக்கு நீங்கள் செய்யும் உதவிதான், பொருட்களை சந்தையில் வாங்குவது, வேலை செய்வது எல்லாம். ஆக, முதலில் நான் குறிப்பிட்டது போல், ஒருவருக்கொருவர் உதவி செய்யாமல், இவ்வுலகத்தில் வாழ முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

ஆகையினால், நான் சொல்ல வருவது என்னவென்றால், நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். பெரிய அளவில் தான் செய்ய வேண்டும் என்றில்லை, சின்னச் சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்தால் கூட போதும்.

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு முறை அக்பரும் பீர்பாலும் மாளிகையின் மாடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த பொழுது, கீழே ஒரு பிணத்தைக் கொண்டு சென்றார்களாம். அக்பர் பீர்பாலைப் பார்த்து, "இறந்தவர் எங்கு செல்கிறார், சொர்க்கத்திற்கா, நரகத்திற்கா, என்று பார்த்து வா" என்று சொல்ல, பீர்பால் சரி சொல்லிவிட்டு கீழே சென்றார். கூட இருந்தவர்களுக்கு ஒரே வியப்பு, எப்படி இறந்தவர் செல்லும் இடத்தை கணிக்க முடியும்? என்று.

திரும்பி வந்த பீர்பால் சொன்னார், "அவர் நிச்சயம் சொர்கத்துக்குத் தான் செல்கிறார்" என்று. விளக்கம் கேட்ட அக்பருக்கு சொன்னார், "அந்த கூட்டத்தில் இருந்தவர்களை விசாரித்ததில் இந்த மனிதன் உயிருடன் இருந்த போது, எல்லாருக்கும் நல்லதே செய்து வந்திருக்கிறார், யார் எப்போது சென்று என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் தன்னால் முடிந்தவரை உதவியிருக்கிறார். இப்படிப்பட்ட ஆத்மா நிச்சயம நல்ல கதியைத் தான் அடையும் என்று நான் நினைக்கிறேன். எனவேதான், அவர் சொர்கத்துக்கு செல்கிறார் என்று கூறினேன்".


ஆக, நாம் பிறருக்குச் செய்யும் உதவி, நமக்கே உதவியாக இருக்கிறது.

சரி, உதவியை எப்போது செய்ய வேண்டும்?

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" என்கிறார் திருவள்ளுவர்.
எனவே, நம்முடைய உதவியைத் தேவைப் படும் காலத்தில் செய்ய வேண்டும்.

எப்படிப்பட்ட உதவியைச் செய்ய வேண்டும்?

உதவியின் தன்மை, அந்த உதவியைப் பொருத்ததன்று. அந்த உதவியைப் பெறுபவர் எந்த அளவுக்கு மகிழ்கிறாரோ அந்த அளவு, உதவியும் பெரியதாக இருக்கும்.
இதை, "உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து." என்கிறார் அய்யன்.

யாருக்கு உதவி செய்ய வேண்டும்?

அந்த உதவியைப் பெறும் நபரால் நமக்கு எந்த பயனும் இல்லாது இருந்தாலும் நாம் அதைச் செய்ய வேண்டும்.
இதை, "பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலிற் பெரிது.'' என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.

அதற்காக, நாம் செய்யும் உதவி
தீமையில் முடியும் என்றால் அந்த உதவியை நாம் எக்காலத்திலும் செய்யக் கூடாது.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்." என்பதும் அய்யனின் வாக்குதான். அதுபோல், எந்த தீமையிலும் முடியாத உதவியைச் செய்வதுதான் சாலச் சிறந்தது. ஆகவே, நாம் நம்மால் முடிந்தவரை பிறருக்கு நன்மை பயக்கிற உதவியைச் செய்வோம், வாழ்வில் உயர்வடைவோம்.

செய்யும் உதவியையும் நேர்மையான வழியில் செய்வோம்.

(பி.கு. இந்தப் பதிவைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்)

Monday, November 2, 2009

அரியது கேட்கின்.............

நண்பர் நாஞ்சில் பிரதாப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க (இப்படி ஒரு எஸ்கேபிசம்), இதோ ஒரு மொக்கை ரேஞ்சில் சூப்பர் பதிவு.

உலகில் அரியது என்று, என் சிற்றறிவுக்குப் பட்டவரை,

1. பணம் சம்பாதித்தல்,

2. நண்பனை அடைதல்,

3. புகழ் சம்பாதித்தல்

4. மக்களைப் பெற்று வளர்த்தல்

5. பிறருக்கு நல்லது செய்தல்

6. நாமாக யோசித்து ஒரு பதிவு போடுதல்

7. நம் பதிவுக்கு பின்னூட்டம் பெறுதல்


இப்பொழுது மேல் சொன்னவற்றை விட, மிகவும் அரிதான விஷயங்களைப் பார்ப்போம். (மேற்சொன்ன வரிசையில் படிக்க வேண்டும்)

1. சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் செலவழித்தல்

2. சம்பாதித்த நண்பனை கடைசி வரை நண்பனாகவே இருக்க வைத்தல்

3. பெற்ற புகழை இறுதிவரை நிலை நிறுத்தல்

4. வளர்த்த குழந்தைகள் பின்னாளில் எனக்காக
என்ன செய்தாய் என்று கேட்காமல் இருத்தல்

5. நாம் நல்லது என்று நினைத்து செய்ததை அவர் தொந்தரவு என்று நினைக்காமல் இருத்தல்

6. நாம் போட்ட பதிவுக்கு "இங்கே நானும் போட்டிருக்கேனே!" என்று ஒரு பின்னூட்டம் வராமல் இருத்தல்

7. அந்த பின்னூட்டம் நாம் எதிர்பார்த்த பதிவரிடமிருந்து வருதல்

(ஏன்னா
பிரதாப்ன்னா, பதிவு சும்மா மொக்கையா இருக்குதான்னா....)