அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 28, 2009

வைகுண்ட ஏகாதசி - ஒரு விளக்கம்

ஒரு முன் டிஸ்கி: எல்லாரும் ஜோரா கை தட்டுங்க........இது என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு

இன்று (28.12.2009) எல்லா வைணவக் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி என்னும் புண்ணிய தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. பரமபத வாசல் திறப்பு என்னும் வைபவமும் நடைபெறுகிறது. பலரும் அதை சொர்க்க வாசல் திறப்பு என்றே கூறி வருகிறார்கள்.


இது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.



அது சொர்க்க வாசல் அல்ல, பரமபத வாசல். வைணவ சித்தாந்தப்படி, புண்ணியம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் சுவர்க்கம். பாவம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் நரகம்.

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.

சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.

அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் எல்லா வைணவ அன்பர்களுக்கும் என்னுடைய வைகுண்ட ஏகாதசி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எண்ணப் படி, இந்த பூவுலகை நீக்கும் காலம் வரும்போது, அந்த எம்பெருமானின் திருப்பாதங்களில் சேவை செய்யும் பாக்கியத்தை உங்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் அருளட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.

கொஞ்சம், எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்!
 
டிஸ்கி : ஹிந்து மத திருவிழாக்களுக்கு வாழ்த்துகள் யாரும் தெரிவிப்பதில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்ட maddy73 அவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

Sunday, December 27, 2009

நிதரிசனம்

"ஏங்க்கா ....
மத்திய அமைச்சர்
மலேசியாவுல சொத்து வாங்கிட்டாராமே!"

"ஏங்க்கா .....
முதலமைச்சர்
முன்னூறு கோடி சேர்த்துட்டாராமே!"

"ஏங்க்கா ....
மத்திய  அமைச்சர்  தம்பிதான்
இப்ப இந்தியாவுலயே
ஏழாவது கோடீஸ்வரராமே !"

புலம்பினாள் பொன்னாத்தா.

"பாவி பயலுக,
நாம கஞ்சிக்கே
நாயா அலையுறோம்,
அவங்களுக்கு மட்டும்
அம்புட்டு சொத்து எங்கிருந்து வந்துச்சு......?"

"அடியே,
அடுத்தவங்களை சொல்லுறதை விட்டுட்டு
உன் அழுக்கைத் திரும்பிப் பாரு,
நீ ரொம்ப யோக்கியமா.....
தப்பே பண்ணலையா....?"
காரமாய் உறுமினான்
கணவன் கண்ணாயிரம்.

"நான் என்ன தப்பு செஞ்சேன்,
மிஞ்சிப் போனா,
போன எலக்சன்ல ஓட்டுப் போட
ஒரு ஆயிரம் ரூபா வாங்கினேன்,
அவ்வளவுதானே!"

கேட்டவுடன் சொன்னான் அவன்,
"அடியே, நீ வாங்கின ஒரு ஆயிரத்திலதாண்டி
அவங்க மொத்த சொத்தும் வாங்கினாங்க"


**********************************************************************
டிஸ்கி: இது கவிதையா என்று கேட்டால் பதில் இல்லை, ஆனால் இது நிச்சயம் கதை இல்லை

Saturday, December 26, 2009

திரை விமரிசனம்

எல்லாரும் திரை விமரிசனம் எழுதுவதைப் பார்த்து எனக்கும் அந்த ஆசை வந்து விட்டதால் இந்தப் பதிவு. எந்தப் படத்தின் விமரிசனம் என்பது டிஸ்கியில். (அதுக்குள்ளே ஸ்க்ரோல் பண்ணி டிஸ்கியைப் பார்க்கணுமா....அப்படி என்னங்க அவசரம்?)
இனி விமரிசனம் :
பொதுவாக கதைக்குப் பஞ்சம் ஏற்படுவது வழக்கம்தான். இருந்தாலும், படத்தின் தலைப்பே பஞ்சமாக இருப்பதால் பழைய படத்தின் தலைப்பை வைத்திருக்கிறார்கள். கதையும் ஒன்றும் புதுமையானது இல்லை. அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். அதுவும் சமீபத்தில் வந்த சில படங்களின் கதைகளை தொகுத்து ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார்கள்.

திரைக்கதை : இதற்கு என்று இயக்குனர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கதையே பழைய சில படங்களில் இருந்து சுட்டதுதானே, அதனால், அந்தந்த படத்தை நினைவு படுத்துவதுபோல் காட்சி அமைத்து விட்டார்.

வசனம் : மாஸ் ஹீரோ என்று வந்துவிட்டாலே, வசனத்துக்கு கஷ்டம் இல்லை. அங்கங்கே, பஞ்ச் டயலாக் வைத்துவிட்டால் தீர்ந்து போச்சு.
"நான் ஒன்னும் நீ அவிச்சு திங்கற இட்லி,இட்லி இல்லடா......
உன்னை அடிச்சுப் போட வந்த ஜெட்லி, ஜெட்லிடா....."



"ஏய், பார்க்க முடிஞ்சாதான் அது கண்ணு......
பாக்க முடியலன்னா.....அதை அவிச்சு தின்னு....."

என்பது போன்ற பஞ்ச் டயலாக் இந்தப் படத்திலும் இருக்கின்றன.



ஹீரோ : தன் வழக்கமான பாணியைக் கைவிடத் தயாராய் இல்லை என்பதை இந்தப் படத்திலும் நிரூபிக்கிறார். அவர் சிரிக்கும்போது, நாம் அழுகிறோம், அழும்போது சிரிக்கிறோம், ஆனால் அவர் கோபப் படும்போது நாமும் கோபப்படுகிறோம்.(பின்ன, இதெல்லாம் ஒரு படம்னு நினைச்சு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி வந்துட்டோமேன்னு நம் மேலே கோபம் வராதா?) இதில் பஞ்ச் டயலாக் வேறு.....கரெக்ட்தான்....ஒவ்வொரு டயலாகும் நம் முகத்தின்மேல் குத்து விழுவதுபோல்தான் இருக்கிறது.

ஹீரோயின்: இவரைப் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. வருகிறார்....சில சமயம் கண்களை கவர்கிறார்....ஹீரோவோடு ஆடுகிறார்.....அவ்வளவுதான். (இந்தக் காலத்தில் ஹீரோயின்களுடைய பங்களிப்பே அவ்வளவுதானே!)

காமெடி: எத்தனையோ காமெடி நடிகர்கள் இந்தப் படத்தில் இருந்தாலும், உச்ச கட்ட காமெடி ஒன்றுதான்: கதையே இல்லாத படத்தில் கதை இன்னாருடையது என்று ஆரம்பத்தில் டைட்டில் போடுகிறார்களே, அந்த சீனை மிஞ்சும் காமெடி படத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.








இசை: வழக்கம்போல் பாடல் வரிகளை விழுங்கிவிட்டு இரைச்சல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார். குத்துப் பாட்டு இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது.



மொத்தத்தில் கதை, வசனம், காட்சியமைப்பு என்று எந்த இடத்திலும் லாஜிக் என்ற ஒன்று இல்லாமல் பார்த்துக் கொண்டதில் இயக்குனர் பெரும் வெற்றி பெற்று விட்டார்.

படம் சூப்பர் ஹிட் என்று கோட் சூட் போட்டுக் கொண்டு வாரா வாரம் டிவியில் சொல்லி விடுவார்கள். ஹிட் தான்...........படம் பார்க்கப் போகும் ஒவ்வொருவர் மீதும் விழும் மரண ஹிட்.

என் ஆலோசனை



படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு : தாராளமாகப் பார்க்கலாம் (யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்)

படம் வெளியிடும் திரையரங்க உரிமையாளர்களுக்கு : இடைவேளையின் போது தலைவலி மாத்திரை விளம்பரத்தையும் ஒளிபரப்புவது சிறந்த சமூகப் பணியாக இருக்கும்.




டிஸ்கி: படத்தின் தலைப்பு தேவையே இல்லை. அநேகமாக, இப்போது வரும் படங்கள் எல்லாமே இந்த வகையிலேயே இருப்பதால், தங்கள் விருப்பம்போல் படத்தின் பெயரைத் தெரிவு செய்து இந்த விமரிசனத்தை படிக்கலாம்.

Friday, December 25, 2009

சிறப்பு வாழ்த்துகள்!


உலகெங்கும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் என் மனமார்ந்த

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.


ஏசு பிரான் போதித்த அஹிம்சையும் சமாதானமும் உலகெங்கும் நிலவுக.

Thursday, December 17, 2009

என்னைச் செதுக்கிய தெய்வங்கள் - 2

ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் - எங்கள் ஊர்க் கோவில் உற்சவ மூர்த்தியின் பெயர். என்னுடைய மூத்த அண்ணனின் பெயரும் அதுதான். கிட்டத்தட்ட என்னுடைய குல தெய்வங்களாக இந்த இரு மூர்த்திகளையும் சொல்லலாம்.

பொதுவாகவே, மூத்த மகனாகப் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்பு என்பது தானாகவே வருவது. இவருக்கும் அப்படித்தான் அந்த பொறுப்பு வைத்தது. எனக்கு நினைவு தெரிந்தது முதல் நானாக ஒரு வேலையில் சேரும்வரை எனக்கான துணிமணிகளை எடுத்துக் கொடுத்தது இவர்தான். எனக்கும் அவருக்கும் இருபது வயது வித்தியாசம் என்பதால் என் இரண்டு வயசிலேயே அவர் Engineering முடித்துவிட்டு ஒரு மத்திய அரசு பணியில் உயர் பதவியில் சேர்ந்துவிட்டார். படிப்பில் புலி. ஒன்றாம் வகுப்பு முதல் முதல் ரேங்க்தான். இளமையில் வறுமையின் கொடுமையை ஓரளவு அனுபவித்தவர். அதனாலேயே, மிகவும் எளிமையாகவே வாழ்பவர். என்னை உருவாக்கிய தெய்வங்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர். என்னுடைய முதல் இரு தெய்வங்களான என்னுடைய பெற்றோரைப் பற்றி ஏற்கெனவே எழுதி விட்டேன்.

இவருக்கு உள்ள சிறப்புகள் அவ்வளவையும் ஒரே பதிவில் சொல்லிவிட முடியும் என்று தோன்றவில்லை.

தொழில் : CECRI என்றழைக்கப்படும் CENTRL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE, KARAIKUDI யில் டெபுடி டைரக்டராக பணியாற்றி சென்ற ஆண்டு (2008) ஜூலை மாதம் ஓய்வு பெற்றவர். RTI Act வந்தபிறகு, இந்த நிறுவனத்தில் information officer ஆகவும் பணி புரிந்தார். RTI Act பற்றி எந்த சந்தேகம் என்றாலும் இவரிடம் கேட்கலாம்.

லைப்ரரி: இவரிடம் தற்போது கிட்டத்தட்ட இருபதாயிரம் புத்தகங்கள் உள்ளன. எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு உள்ள பழைய புத்தக கடைக்கு சென்று புத்தகங்கள் வாங்காமல் வருவதில்லை. தினமலர், தினமணி, Indian Express நாளிதழ்களில் இவருடைய புத்தக ஆர்வம் பற்றி வந்துள்ள செய்திகள் கீழே:-




பழம்பொருட்கள் சேகரிப்பு : பழங்காலப் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவற்றையும் சேகரிப்பது இவரது பொழுதுபோக்கு. சுமார் 25 வகையான பாக்குவெட்டிகள் உட்பட பழமை வாய்ந்த பொருட்கள் 500 இவரது சேகரிப்பில் உள்ளன. இது பற்றி வந்த நாளிதழ் செய்தி கீழே:-




இவரைப் பற்றி தூர்தர்ஷனில் வந்த செய்தித் தொகுப்பு கீழே:-





கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் மனைவியை இழந்த இவர் (குழந்தைகளும் இல்லை) லைப்ரரியை மனைவியாகவும் பழம்பொருட்களை குழந்தைகளாகவும் பாவித்து வருகிறார் என்றே கூறலாம்.

இது போக, பல தலைப்புகளில் கல்லூரிகளில் seminar களும் நடத்தி வருகிறார்.

மொத்தத்தில் இவர் பல்கலை வித்தகர் என்றே கூறுவேன். இவரது தம்பியாக இருப்பது எப்போதும் எனக்கு பெருமைதான்.

இவரைப் பற்றி மேலும் அறிய வேண்டுமானால் இந்த வலைப்பூவைப் பார்க்கவும்.

இவருடைய அலைபேசி எண் : 9443136223

Monday, December 14, 2009

என்னைச் செதுக்கிய தெய்வங்கள் - 1



என் கண் கண்ட தெய்வங்களான என் பெற்றோர் பற்றியே இந்தப் பதிவு.
ஸ்ரீனிவாசகோபாலாசாரியார் , தெரிந்தவர் மத்தியில் செல்லப்பா சுவாமி - இதுதான் என் தந்தை பெயர்.

நல்ல ஆச்சாரமான வைதீக குடும்பத்தில் பிறந்து வேதங்களைக் கற்று தேர்ந்து ஏறக்குறைய 65 வருடங்களாக வேத பாராயணம் செய்து வரும் ஆச்சாரமான ஒழுக்க சீலரான இவருடைய மகன் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமைதான்.
ஏழு வயதிலேயே தன் தாத்தாவைப் போல், அப்பாவைப் போல், தானும் வேதம் ஓதும் தொழிலே செய்யப் போவதாய் முடிவு செய்து அதன்படி மன்னார்குடியில் புகழ் பெற்று விளங்கிய ஸ்ரீ அண்ணாஸ்வாமி வேத பிரபந்த பாடசாலையில் சேர்ந்து ஏழு வருடங்கள் முழுமையாக வேதங்களைக் கற்று விற்பன்னர் ஆனார். சொற்ப வருவாயே வந்தாலும் இதுதான் தன் குலத் தொழில் என்று உறுதியாக நின்று மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் வேதம் ஓதும் பணியிலும் சேர்ந்தார்.
பொருட்செல்வத்தில் சற்று குறையிருந்தாலும் மழலைசெல்வத்திலும் கடவுளின் அருட்செல்வத்திலும் அவருக்கு குறையே இல்லை. பல குழந்தைகள் இருந்தாலும் அனைவரையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். கடவுள் அருளால் நாங்களும் நன்றாகப் படித்தோம். என் மூத்த அண்ணன் ஒரு வேலையில் சேர்ந்து, குடும்பத்திற்கு உதவியாய் இருக்கும் வரை எங்களை எல்லாம் நன்கு படிக்க வைத்து ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுத்த மாபெரும் தெய்வம் என் தந்தை.
என் வீட்டுக்கும் நாங்கள் படித்த பள்ளிக்கும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். காலையில் அவசரமாக பழைய உணவைச் சாப்பிட்டுவிட்டு நாங்கள் பள்ளிக்கு செல்வோம். வேகாத வெயிலில் பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு குடையோ செருப்போ கூட இல்லாமல் நடந்து வந்து எங்களுக்கு மதிய உணவைக் கொடுப்பார். அது மட்டுமல்லாமல் எங்களுடைய துணிகளை குளத்திற்கு எடுத்து சென்று எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக, துவைத்து, பின்பு உலர்த்தி மடித்து வைத்து....அப்பப்பா......அதில் இருந்த நேர்த்தியும், அதில் தெரிந்த பாசமும், எழுத்தில் வடிக்க முடியாது.
தன் பணக்கஷ்டம் வெளியில் தெரியாமல் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து சந்தோஷப் பட்டவர் எங்கள் தந்தை. இன்று நானும் என் சகோதர சகோதரிகளும் நல்ல வேலையில் நல்ல நிலையில் இருக்கிறோம். இருந்தாலும், இன்றும் தன் சொந்த உழைப்பையே நம்பி வேத பாராயணம் செய்யும் உத்தமர்.
"ஏம்பா, நாங்கதான் நல்ல நிலையில் இருக்கோமே, நீங்க என் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொண்டு அலையணும், ரெஸ்ட் எடுக்கக் கூடாதா?" என்று கேட்டல்,
"நீ உன்னை வளர்த்த அப்பாவை வச்சு காப்பாத்தனும்னு நினைக்கிறே! சந்தோசம், ஆனா என்னையும் என் பசங்களையும் வளர்த்த வேதத்தை நான் வச்சுக் காப்பாத்தனும்னு நான் ஆசைப் படறேன். அதான், இன்னும் வேத பாராயணம் செய்யறதை விடறதா இல்லை" என்று வேடிக்கையாகவும் லாஜிக்காகவும் சொல்லி சிரிப்பார் அவர்.
வயதான தாயைக் கஷ்டப் படுத்தக்கூடாது என்பதற்காகவே, அவர் சொந்த ஊரை விட்டு எங்கும் செல்லவில்லை. என் மாமாதாத்தா (அவர் தாய்மாமன்) சென்னையில் நல்ல நிலையில் இருந்தபோது, "செல்லப்பா, இங்க வந்துடு, இங்க ஓரளவு வருமானம் வரும், உன் குழந்தைகளைப் படிக்க வைக்க வசதிகள் இருக்கும்" என்று அழைத்தபோது, "அம்மா இங்குதான் இருக்க விரும்பிருகிறார், அவரை விட்டு எங்கும் செல்வதாக இல்லை" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் அப்பா.
என் தந்தை அவர் பெற்றோரிடம் காட்டிய பாசத்திலும், பணிவிலும் ஒன்றிரண்டு சதவீதம் இன்றுள்ள பிள்ளைகளிடம் இருந்தாலே போதும், முதியோர் இல்லங்களின் தேவை இருக்காது என்பது என் கருத்து.
சமீபத்தில் 2007 ம் ஆண்டு, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கையால் "ஸ்ரௌதி குல திலகம்" (வேத விற்பன்னர் குலத்தில் ஒரு திலகம் என்று பொருள்) என்ற விருது பெற்று சிறப்பிக்கப்பட்டார் என் தந்தை.


என் தாயார் பற்றி குறிப்பிட வேண்டுமானால், தனியாக ஒரு பதிவு போட வேண்டும். சுருங்கச் சொன்னால், வேதவல்லி அம்மையார் (என் தாயார் பெயர்), தன் கணவரையும் கணவர் குடும்பத்தையும் அனுசரித்துப் போய், பிள்ளைகளையும் பாசத்தோடு வளர்த்து, இன்று எல்லா மருமகள்களையும் மகள்களாகவே பாவித்து அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர். "உங்களுக்கு என்ன மாமி, உங்க பசங்க எல்லாம் சொக்கத் தங்கம், இப்படி பிள்ளைங்களைப் பெற என்ன தவம் செஞ்சீங்களோ!" என்று தெருவில் உள்ள எல்லோரும் போற்றும்படியான வாழ்வை எங்களுக்கு பெற்று தந்தவர்.
உண்மையில், நாங்கள் தான் இப்படிப் பட்ட தாய் தந்தையரைப் பெற தவம் செய்திருக்கிறோம்.
"இறைவா, மீண்டும் ஒரு பிறவி அமையுமானால், அவர்கள் இருவரும் என் மக்களாகப் பிறந்து, என் நன்றிக் கடனை ஓரளவாவது நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்" என்பதே என்னுடைய பிரார்த்தனை.
டிஸ்கி: என்னைபோன்ற என்னைவிடவும் பெற்றோரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

Friday, December 11, 2009

வாழ்க்கை - நட்பு

எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில் "நட்பு" என்ற ஒன்றைக் கடந்து வந்தே ஆகவேண்டும். சிறு வயதில், கள்ளங்கபடமற்ற குழந்தையாய், சக மாணவனோடு பழகுவது முதல், வேலையிலிருந்து ஓய்வு பெற்று வாசல் திண்ணையில் சக வயது சீனியர் சிடிசன்களுடன் அரட்டை அடிப்பது வரை ஒருவரது வாழ்க்கையில் நட்பு பெரும்பங்கு வகிக்கிறது.

சிறு வயதில் "மாங்காக்கடி" நண்பர்களைப் பற்றி பெரிதும் பேச ஒன்றும் இல்லை. பல நாட்களாக பழகி வந்திருந்தாலும், ஒரு நாள் குச்சியோ, கடலைமிட்டாயோ அல்லது வேறு ஒரு தின்பண்டமோ தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக "உன்கூட டூ" என்று கோபித்துக் கொள்ளும், அதே நேரத்தில் அடுத்த நாளே "பழம்" விடும் நட்பு. அதில் பெரிதாக சிலாகிக்க ஒன்றும் இல்லை.

அடுத்து பத்து வயது முதல் பதினைந்து வயது வரை "அடலசன்ட்" வயதில் மலரும் நட்பு. இந்த நட்பிலும் ஓரளவு கபடமற்ற மனப் பரிமாற்றங்களே நிகழும். ஆனால், இந்த வயதில் ஏற்படும் நட்பு குறித்து பெற்றோர் கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டும். திருட்டு தம், குடி என்று மாணவப் பருவத்தையே நாசம் செய்யும் மோசமான நட்புகள் கூட இந்தப் பருவத்தில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.(என் பள்ளிக்கூட நாட்களில் பெரும்பாலும் காலேஜ் செல்லும் மாணவர்களிடம்தான் இந்தப் பழக்கம் இருந்தது, இன்று உலகம் முன்னேறிவிட்டது, பள்ளிப் பருவத்திலேயே, இந்த கூடா நட்பு உருவாகும் சூழல் நிலவுகிறது என்பது வேதனையான அனுபவம்). பெற்றோர் தீவிரமாகக் கண்காணித்து அவர்களுடைய அன்பும் ஆதரவும் கொஞ்சம் மிரட்டலும் கூடிய அறிவுரைகள் இந்த வகை நட்புகளைச் செம்மைப் படுத்திவிடும்.

பதினைந்து வயது முதல் இருபது, இருபத்தைந்து வயது வரை மலரும் நட்பு அநேகமாக நம் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்கிறது என்பதில் ஐயமே இல்லை. காண்கிற எல்லா எதிர்பாலரிடமும் காதலைக் காண்கிற மனோ பாவம், ஓரளவு நாமே சிந்திக்கிற அளவு வளர்ந்துவிட்டோம் என்கிற எண்ணம், இவை எல்லாம் இந்த பருவத்தில் நமக்கு பலவித நட்பு சூழல்களை உருவாக்குகின்றன. இந்த வயதில் ஏற்படும் நட்புதான், நம்மை, நம்முடைய எண்ணங்களைச் முழுமைப் படுத்துகின்றன என்று சொன்னாலும் மிகையாகாது. நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி பாடுபட்டு நம்மையும் இந்த சமுதாயத்தில் ஒரு மனிதனாக உருவாக்கக் காரணமாக இருக்கும் பெற்றோர்களையும், உற்றார் உறவினர்களையும் விட, நம்முடைய நண்பர்களே தெய்வங்களாகவும், வழிகாட்டிகளாகவும் தோன்றும் காலம் இது.

"உன் நண்பனைப் பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன்" என்ற பழமொழி இந்தப் பருவத்து நட்புக்கு பெரிதும் பொருந்தும் பொன்மொழியாகும். இந்த வயதில் ஏற்படும் நட்பு குறித்து பெற்றோர் கண்காணித்தாலும், சம்பத்தப்பட்ட இரு நண்பர்களும் தாங்களாக புரிந்து கொண்டால் ஒழிய, இந்தவகை நட்புகளை எளிதில் பிரித்து விட முடியாது. பலவகையான கலந்தாய்வுகள்(counselling), தொடர்ந்த அறிவுரைகள் மற்றும் பொறுமையான கையாளல் போன்ற வழிகளின் மூலமே, இந்த வகை நட்புகளின் நன்மை, தீமைகளை அவர்கள் மத்தியில் புரிய வைக்க முடியும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அடக்குமுறை, மிரட்டல் எல்லாம் நடக்காது.

எல்லாவற்றையும் விட ஒன்று. இந்தப் பருவத்தைத் தாண்டியவர்கள் எல்லோருடைய மனத்திலும் இந்த வயது நட்புகள் ஏற்படுத்திய தாக்கம் பின்னாளில் அறுபது எழுபது வயதுகளில் கூட இருக்கும். அந்த வயதுகளில் தாங்கள் செய்த தவறுகள், தங்கள் பிள்ளைகளும் செய்துவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் புலம்புவதை நான் பெரும்பாலும் கண்டிருக்கிறேன்.

ஆகவே, இந்தப் பதிவைப் படிக்கும் மேற்சொன்ன வயதில் உள்ளவர்கள், தங்கள் நட்பு வட்டத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், இதில் உள்ள பொருள் விளங்கும்.


.............(தொடர்ந்து சிந்திப்போம்)

Wednesday, December 9, 2009

வாழ்க்கையின் விசித்திரம்

டாமின் கையில் சிக்காமல்
புதுப்புது ஐடியாக்கள் மூலம்
தான் தப்பி
பூனையை மாட்டிவிட்ட
ஜெர்ரியை ரசித்தபின்
தூங்கப் போனேன் -
வடையை பொறியில் வைத்தபின்.

****************************


"ஐயா,
இந்த பத்து ரூபாயை
வைத்துத்தான்
இன்னைய பொழுதை
ஓட்டணும்"
சோகவசனம் பேசியபின்
சொகுசுக் காரில் பறந்தார்
அந்த படத்து ஹீரோ.

***********************************

Thursday, December 3, 2009

தாம்பத்தியம்

"ஏங்க,
இது நம்ம நிச்சயதார்த்தத்தில்
நீங்க போட்டிருந்த சட்டைதானே?"

"ஏங்க,
இது நமக்கு கல்யாணமாகி
முதல் சம்பளத்துல
வாங்கிக் குடுத்த புடவைங்க..."

"ஏங்க,
இதத் தெரிலையா?
நம்ம பொண்ணுக்கு
மூணு வயசாகும்போது
நீங்க வாங்கிக் குடுத்த பொம்மைங்க..."

"ஏங்க,
இந்த பேனாவைப் பார்த்தீங்களா?
முத முதல்ல நம்ம பொண்ணு
வாங்கின பரிசுங்க..."

"ஏங்க,
நம்ம பையன் கல்யாணத்தும்போது
யாரோ வெத்திலை பாக்கு துப்பி
கறையான உங்க சட்டைங்க..."

உன் ஞாபக சக்தியைக் கண்டு
பெருமையாகத் தான் இருந்தது.....

"இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு
வந்த புதுசில,
ரெண்டு பவுன் சங்கிலி
வாங்கித் தர்றேன்னு சொன்னாரு
உங்க தாத்தா,
ஹூம்!......."
என்று நம் பேரனிடம்
நீ புலம்பும் வரை.

(இந்த கவிதையை உரையாடல் கவிதைப் போட்டிக்கு அனுப்பிவிட்டேன்..)

Wednesday, December 2, 2009

வலைப்பூவே, நீ என்றும் வாழ்க

டிசம்பர் 1 2009, ஒரு அருமையான நாள். வழக்கம்போல் என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டறுத்துக் கொண்டிருந்தேன். பதிவு போடும்போது இருக்கும் சந்தோஷத்தை விட அதற்கு ஒரு பின்னூட்டம் (திட்டி எழுதி இருந்தாலும்) காணும்போது வரும் சந்தோஷம் கொஞ்சம் அதிகம்தானே!

ஒரு பின்னோட்டம், mohankumar என்று ஒரு பதிவர் போட்டிருந்தார். என் வலைப்பூவில் புதியதாக வரும் பதிவர் யாராக இருந்தாலும் அவருடைய வலைப்பூவை உடனே பார்த்து விடும் வழக்கம் உடையவன். எனவே, அவருடைய பெயரில் க்ளிக்கி அவருடைய வலைப்பூவை open செய்தேன். அப்போது, அவருடைய புகைப்படத்தைப் பார்த்தால், என்னுடைய இளவயது பள்ளி சகாபோல் தெரிய, அவசரமாக அவருடைய profile ஐ பார்க்கத் தொடங்கினேன். படித்தது மன்னார்குடியில் என்று தெரிந்ததுமே, மனம் சந்தோஷத்தில் துள்ளியது. இவனேதான்.....என்னுடன் பத்தாம் வகுப்பு படித்த மோகன்தான் என்பதை அறிந்தேன். உடனே, அவனுடைய பதிவில் பின்னூட்டமிட்டு, என் செல் எண்ணையும் கொடுத்தேன். கேபிளாரைத் தொடர்பு கொண்டு, அவருடைய செல் நம்பர் இருக்கிறதா என்றும் கேட்டேன். சரியாக ஒரு மணி நேரத்தில் மோகனே, என்னிடம் தொடர்பு கொண்டான். இருவரும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் அளவளாவினோம். மனம் சற்றே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பயணப் பட்டது.

மன்னார்குடி ஒரு கிராமமும் அல்ல, பெரிய சிட்டியும் அல்லாமல், ஒரு நடுத்தர ஊர். மொத்தம் நான்கே தியேட்டர்களுடன் (அப்போதெல்லாம், தியேட்டர்களை வைத்துதான் ஊரின் மதிப்பு) மூன்று உயர்நிலைப் பள்ளிகள் (சினிமா பஸ்ட், படிப்பு நெக்ஸ்ட்) உள்ள இந்த ஊரில்தான் என்னுடைய பிளஸ் டூ வரை படித்தேன். மீசை அரும்பும் டீன் ஏஜ் வயசாச்சே. பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்கும் வயசு. எங்கள் வகுப்பில் நாங்கள் 35 பேர் ஆண்கள், நான்கே பேர்தான் பெண்கள். அதில் ஒரு பெண், மிகவும் அழகாக இருப்பாள். எனக்கு என் ஜாதிப் பெண் தவிர பிறர் மீது நாட்டமில்லாததால், அவள் மீது மையல் இல்லை. ஆனால், மொத்த கிளாசே அவள்மீது மையல் கொண்டு, அவள் நம்மிடம் பேச மாட்டாளா, என்று அலைவார்கள். அதிலும் ஒரு பையன் அவள் வசிக்கும் தெருவில்தான் இருந்தான். இதையே காரணமாகக் கொண்டு அவன் எங்களிடம் எல்லாம், "நான்தான் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன்" என்று பீலா விடுவான். அப்போது, மேலே சொன்ன இந்த மோகன் அவனிடம் "அடப் போடா! அதெல்லாம் உன்னால் முடியாது" என்று உசுப்பி விட, அவன் சொன்னான், "இங்கே பாருடா, சரியா இன்னும் ஒரு பத்து வருடம், 1994 ல அவளைக் கல்யாணம் பண்ணிக்கலை, என் பேரு .........இல்ல" என்று சபதம் வேறு செய்தான்.

எல்லோரும் ஏதாவது ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் மட்டும் இளிச்சவாயனாகத் தெரிந்ததால், நானே கற்பனையாக ஒரு பெண்ணின் பெயரை சொல்லிக்கொண்டு, அவள் என் உறவுக்காரப் பெண் என்றும், அவள் என்னைக் காதலிப்பதாகவும் என் பங்குக்கு பீலா விட, இந்த மோகன் சரியாகக் கண்டுபிடித்து விட்டான். என் தம்பியும் அந்தப் பள்ளியில் படித்து வந்ததால் அவனையே கூப்பிட்டு, ".............. பெயரில் உனக்கு சொந்தக்காரப் பொண்ணு இருக்காளாடா" என்று கேட்க, என் தம்பியும் "அப்படியெல்லாம் இல்லையே" என்று உண்மையை உளறிக் கொட்ட, அன்று முதல், என்னைக் கலாய்ப்பதே அவன் வேலையாக இருந்தது. பிறகு, பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்க அவன் வேறு ஸ்கூலுக்கு சென்று விட்டான். நான் அதே பள்ளியில் படித்தேன். அதன் பிறகு, அவன் ஞாபகம்கூட இல்லை.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அவனுடைய நட்பு கிடைத்தபோது, அதை எப்படி எழுதுவது......இந்த காலகட்டத்தில், பல நண்பர்கள் கிடைத்தபோதும், அந்த இளவயது நட்பு மீண்டும் துளிர் விடும்போது, மனதை நெகிழச் செய்கிறது. இந்த ஒரு வருடத்தில் நான் தொடர்பு கொண்ட பத்தாவது இளமைக்கால நண்பன் இவன். ஆம், என்னுடன் பத்தாவது படித்தவர்களில் பத்து நண்பர்களின் தொடர்பு இன்றும் என்னிடம் இருக்கிறது.

என் இளவயது நண்பனை மீண்டும் கண்டுகொள்ள உதவிய வலைப்பூவே, நீ என்றும் வாழ்க!

டிஸ்கி: சபதம் செய்த நண்பனுக்கும், அந்த அழகான பெண்ணுக்கும் சொல்லி வைத்தாற்போல், சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களுடன்.