அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, March 28, 2010

நினைத்தேன் எழுதுகிறேன் - மக்கள் வளர்ப்பு.

இட்லிவடையில் இந்தப் பதிவைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியதை இங்கே தந்திருக்கிறேன்.

பொதுவாகவே, பெரியவர்கள் சொல்லுவதை ஒரு கணமேனும் கேட்கும் உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை.

தங்கள் பிள்ளைகள் வளரும்போதே நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கத் தவறும் பெற்றோர்கள், பின்னாளில் அவர்கள் தங்களை மதிப்பதில்லை என்று புலம்புவது நியாயமாக எனக்குப் படவில்லை.

பிள்ளைகளுக்கு எதிரிலேயே மது குடித்துக்கொண்டும், சிகரெட் புகைத்துக் கொண்டும் இருந்துவிட்டு அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?

முக்கல், முனகல் பாடல்களை எல்லாம் டிவியில் பார்த்துக் கொண்டு அவர்களை ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் பெற்றோர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

ஒன்று நினைவில் வையுங்கள், பெற்றோரே!


நீங்கள் உங்கள் பிள்ளைகளை மட்டும் கெடுக்கவில்லை, எதிர்கால இந்தியாவையே சொல்லப் போனால் உலகத்தையே கெடுக்கிறீர்கள்.

ஒரு ஜோக்:
ஒரு ஆசிரியர் தன் மாணவனைப் பார்த்துச் சொன்னாராம்:"எங்கள் காலத்தில் ஆசிரியர் வந்தால் நாங்கள் பணிவுடன் எழுந்து நிற்போம், அவர் மேல் அப்படி ஒரு மதிப்பு வைத்திருந்தோம், தெரியுமா?"

மாணவன் பதில் சொன்னானாம் : "என்ன சார் செய்வது, அவர் உங்களுக்குப் பாடம் நடத்திய விதம் அப்படி" என்று.

தான் நல்ல ஆசிரியராக இல்லாமல், தன் மாணவன் மட்டும் நல்ல மாணவனாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு நீங்கள் நல்ல பெற்றோராக இல்லாமல் உங்கள் மக்கள் நன்மக்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது.

Wednesday, March 24, 2010

ஸ்ரீ ராம நவமி

----------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய ஸ்ரீ ராம நவமி  வாழ்த்துகள்!


வடுவூரில் சேவை சாதிக்கும்
சீதா லக்ஷ்மண, ஹனுமத் சமேத ஸ்ரீ கோதண்ட ராமர்.

ராமன் என்ற பெயர் காரணம் என் அப்பா கூறுவார் :
ரம்ய இதி ராம - அனைவருக்கும் இனிமை தருபவன் என்று பொருள் கொண்ட பெயர் ராம நாமம்.

"இன்று போய் நாளை வா " என்று ராவணனை கருணையோடு விட்ட இடத்தில் நினைத்துப் பாருங்கள். "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" என்ற பாரதி வரிகளுக்கு இதை விட பொருத்தமான இடம் எனக்கு தோன்றவில்லை.

வேடர் குல குகனையும், விலங்கு அனுமனையும் அசுரர் குலத்தில் உதித்த விபீஷணனையும் தம்பிகளாக ஏற்றுக் கொண்டான். சமத்துவம் காண்பதில் எல்லோருக்கும் முன்னோடி ராமன்.



கீழ்  ஜாதியில் பிறந்த சபரி என்ற கிழவி ஊட்டிய எச்சில் பழங்களை அன்போடு ஏற்றுக் கொண்ட பண்பாளன், ராமன்.


"தந்தை சொல்லித்தான் போக வேண்டும் என்பதில்லை, நீங்கள் சொன்னாலும் நான் காட்டுக்குப் போகத் தயார்" என்று கைகேயியிடம் கூறுகிறானே, ராமன், யாருக்கு அவ்வளவு பக்குவம் வரும்?

போர் எல்லாம் முடிந்து, தசரதர் வானிலே தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டபோது,
"கைகேயியை மனைவி அல்ல என்றும் பரதனை மகன் அல்ல என்றும் நீங்கள் துறந்ததை மறந்து விட்டு அவர்களை மனைவி, மகனாகக் கொள்ள வேண்டும்" என்று வரம் கேட்ட ராமன், சக மனிதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கும் உதாரண புருஷனாகிறான்.

இன்னும் என்னென்னவோ சொல்லலாம், மொத்தத்தில் ராமன் கதை எல்லோருக்கும் ஒரு சிறந்த அறிவு நூல் என்பதில் ஐயப்பாடு இல்லை.

பார்வத் உவாச
கேனோ பாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதேர் பண்டியதே நித்யம் ச்ரோதுமிச்சாம்யகம் பிரபோ!   


சிவனிடம் பார்வதி கேட்கிறாள், "இந்த அவசர யுகத்தில் நாராயணனுடைய ஆயிர நாமங்களையும் சொல்ல நேரம் இல்லாதபோது என்ன செய்வது?"

ஈஸ்வர உவாச :
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.

சிவன் கூறுகிறார் "ஆயிர நாமங்களுடைய தத்துவங்களையும் ராம என்ற நாமம் கொண்டுள்ளது. எனவே, ஒருவன், ராம நாமத்தை மூன்று முறை ஜபிப்பதால் அந்த ஆயிர நாமங்களையும் ஜபித்தவன்  ஆகிறான்"

ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம்
நம்பிய பேருக்கு எது பயம்?

Saturday, March 20, 2010

பதின்ம வயது - தொடர்பதிவு

முதலில் இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த மாதவனுக்கு நன்றி.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பருவமாக இந்தப் பதின்ம வயதுப் பருவம் அமைந்துவிடுகிறது.

பத்து வயது வரை எதுவும் தெரியாத பருவம் என்று கொண்டால், இருபது வயது முதல் எல்லாம் தெரிகின்ற பருவம் என்று கொண்டால், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற இரண்டுங்கெட்டான் பருவமாக எனக்கு இந்தப் பதின்ம வயதுப் பருவம் தெரிகிறது.

ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வருகிறது:
ஒரு ஐந்து வயது குழந்தை கேட்கிறது, கர்ப்பிணி அம்மாவை : "உன் வயித்தில் என்னம்மா?"
அம்மாவின் பதில் : "உன் தம்பிப் பாப்பாடா"
குழந்தை : "பாப்பாவை உனக்கு பிடிக்குமா அம்மா?"
அம்மா : "பிடிக்கும், ஏன்டா?"
குழந்தை : "அப்புறம் ஏம்மா பாப்பாவை முழுங்கின?"

இப்படி எதுவும் தெரியாத குழந்தை, இருபத்தைந்து வயது நெருங்கும்போது, கேட்கும் கேள்வி "என்னை ஏன் பெத்த?"

ஆனால், பதின்ம வயதில் இருக்கும் ஆணை விட, பெண் சற்று பொறுப்பு உள்ளவளாகத்   தெரிகிறாள்.  பொதுவாகவே, நம்முடைய சமூக அமைப்பு பெண் குழந்தைகளை சற்று ஜாக்கிரதையாகத்தான் வளரச் செய்கிறது.  என்னதான் மகளிர் உரிமை என்று ஊர் முழுக்க தண்டோரா போட்டாலும், தன் வீட்டு பெண் தனக்குக் கட்டுப் பட்டவளாக இருக்க வேண்டும் என்று எந்த பெற்றோரும் நினைப்பதால், பெண் கட்டுப்பாட்டோடும் ஒழுங்கோடும் வளர்க்கப் படுகிறாள்.

ஆனால், ஒரு ஆண் அப்படி வளர்வதில்லை. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற பழமொழிக்கேற்ப, அவன் வீட்டிலேயே அவன் ஒழுங்காக கண்காணிக்கப் படுவதில்லை.  அது போக, இந்த விஞ்ஞான உலகத்தில் டிவி மூலம் வீட்டிற்கே செய்திகள் வந்துவிடுவதால் (படங்களுடன்), சிறு வயதிலேயே கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்.

ஆனாலும், பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை நன்கு கண்காணித்து அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டால் போதும், அவர்களை நல்லா முறையில் வளர்க்க முடியும் என்றுதான் நான் கருதுகிறேன்.

மொத்தத்தில் பதின்ம வயதுப் பருவம் சம்மந்தப் பட்ட பையனை/பெண்ணை விட அவர்களின் பெற்றோருக்கே சோதனைக் காலம்.

டிஸ்கி : என்னுடைய பதின்ம வயதுப் பருவம் பற்றி ஏற்கெனவே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வயதில் ஏற்பட்டிருக்கக் கூடிய கூடா நட்பு எனக்கு ஏற்படா வண்ணம் என்னைக் காத்த கடவுளுக்கும், என்னை அக்கறையோடு வளர்த்த என் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி பாராட்டுகிறேன்.

Sunday, March 14, 2010

அநேகமாகத் தெரிந்த கதையும் அவசியம் தெரிய வேண்டிய பின்கதையும்

--------------------------------------------------------------------

தெரிந்த கதை : 

ஒரு குல்லாய் வியாபாரி கூடை நிறைய குல்லாய்களை வைத்துக் கொண்டு வியாபாரத்துக்கு சென்றான். நண்பகல் வெயில் தாங்காமல் அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் இளைப்பாறினான். சிறிது நேரம் கண்ணயர்ந்தபின் திடீரென்று விழித்தவன் அதிர்ந்தான்.

  
 பக்கத்தில் கூடையில் வைத்திருந்த குல்லாய்களெல்லாம் காணவில்லை. மேலே நிமிர்ந்து பார்த்தால் மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகளின் தலையில் குல்லாய்கள். ஒரு கல்லை எடுத்து அவற்றின் மேல் வீசினான். பதிலுக்கு குரங்குகளும் மரத்திலிருந்த காய்களை எடுத்து வீசின. சிறிது நேரம் யோசித்தான். பின் தன் தலையில் இருந்த குல்லாயை தரையில் வீசினான்.  குரங்குகளும் தம் தலையில் இருந்த குல்லாய்களை எடுத்து தரையில் வீசின.  வியாபாரியும் மகிழ்ச்சியோடு அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். 


தெரிய வேண்டிய பின்கதை :

சில காலம் சென்றன. இப்போது அந்த வியாபாரிக்கு ஒரு பேரன் இருந்தான். அவனிடம் தன்னுடைய அனுபவத்தைக் கூறிய அவன், இந்த குரங்குகளிடம் ஏற்பட்ட அனுபவத்தையும் விவரித்தான்.  பேரனும் இதனை மனத்தில் பதிய வைத்துக் கொண்டான்.  சிறிது நாட்கள் கழித்து பேரன் தன் தலையில் குல்லாய்க் கூடையை வைத்துக் கொண்டு விற்பனைக்கு சென்றான். நண்பகல், ஒரு மரத்தின் நிழலில் இளைப்பாறினான். கண்விழித்துப் பார்த்தால், கூடை காலி, ஆம், குல்லாய்கள் மரத்தின் மேலிருந்த குரங்குகளின் தலையில்.  யோசித்துப் பார்த்த அவனுக்கு தாத்தாவின் யோசனை ஞாபகம் வந்தது.  சட்டென்று தன் தலையில் இருந்த குல்லாயை தரையில் வீசினான்.  குரங்குகள் சும்மா இருந்தன. திரும்பவும் எடுத்து வீசினான், இப்போதும் குரங்குகள் சும்மா இருந்தன.

அலுத்துப் போய் தரையில் உட்கார்ந்தான்.

அப்போது ஒரு குரங்கு சத்தமாகக் கூறியது :
"உனக்கு மட்டும்தான் தாத்தா கதை கூறுவாரா? எங்கள் தாத்தா அவர் ஏமாந்த கதையை எங்களுக்கு கூற மாட்டாரா?"

Tuesday, March 9, 2010

அறிந்த தகவல் - அறியாத புகைப்படம்

ஏப்ரல் பதினான்கு, 1912 - நள்ளிரவுக்கு சற்று முன் ஒரு பனிப்பாறையில் மோதி கடலுக்குள் போன டைடானிக் கப்பல் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது பற்றி கூகிளாண்டவர் மற்றும் விக்கிபீடியா மூலம் அறிந்திருப்பீர்கள்.  அது பற்றி அன்றைய செய்தித் தாளில் வந்த செய்தியைப் படத்துடன் எனக்கு என் அண்ணன் மின்னஞ்சல் செய்திருந்தார் அது உங்கள் பார்வைக்கு:






இதில் இருக்கும் சிலரின் புகைப்படங்களை பார்க்கும்போது 1997 ல் வந்த டைடானிக் திரைப்படத்தில் வரும் சிலரைப் போலவே (குறிப்பாக கப்பலின் கேப்டன்) இருப்பதாக எனக்குப் படுகிறது.....உங்களுக்கு?

Monday, March 8, 2010

பெண்ணே, நீ என்றும் வாழ்க!

-----------------------------------------------------------

கீழ்க்கண்ட பொருட்களுக்கான விளம்பரங்களைக் கவனித்து இருக்கிறீர்களா?

வகை ஒன்று:
அழகு சாதனங்கள் 
சமையல் எண்ணெய் / உணவு பண்டங்கள் 
சலவை சோப்பு/பவுடர் 
குழந்தைகளுக்கான பானங்கள்
பாத்திரம் தேய்க்கும் பவுடர்

வகை இரண்டு:
பைக், கார் இதர வாகனங்கள்
என்ஜின் ஆயில் 
சுறுசுறுப்பு டானிக்
அலுவலக பயன்பாட்டு சாதனங்கள்

வகை ஒன்றில் பெரும்பாலும் ஒரு பெண்மணி இருப்பார், அந்த பொருளின் சிறப்பை எடுத்துச் சொல்லுவார்.

வகை இரண்டில் பெரும்பாலும் ஒரு ஆண்மகன் இருப்பார், அந்த பொருளின் சிறப்பை விளக்குவார்.

ஏதோ, பெண்கள் எல்லாம் அடுக்களை வேலையைச் செய்வதற்காகவே பிறந்தது போலவும், ஆண்கள் எல்லாம் வெளி வேலைகளை கவனிக்கவே இருப்பது போலவும் இந்த விளம்பரங்கள் பறைசாற்றுவதாக நான் எண்ணுகிறேன்.

ஏன், ஒரு பெண்மணி ஒரு காரின் பெருமையைச் சொல்லக் கூடாதா? ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா?  இந்த விளம்பரங்கள் எல்லாமே ஆணாதிக்க சிந்தனை உள்ளவையாகவே எனக்குத் தோன்றுகிறது.

அது தவிர, ஒரு பெண் என்றால் அழகானவளாகத் தான் இருக்க வேண்டும்.  அழகில்லாத எந்தப் பெண்ணும் உலகில் இருக்கவே லாயக்கில்லாதவள் என்பதுபோல் விளம்பரங்களை வெளியிடும் அழகு சாதனப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களின் சிறப்பை அவர்களே அறியவில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.  பாருங்கள், மருமகளை மாமியார் கொடுமைப் படுத்துவது, மாமியாரை மருமகள் உதாசீனப் படுத்துவது போன்ற காட்சிகளை டிவியில் காணும் அளவுக்கு நாம் என்றாவது மருமகன்/மாமனார் கொடுமைகளை கண்டிருக்கிறோமா?  தனது மருமகளும் ஒரு காலத்தில் மாமியார் ஆகப் போகிறவள்தான், தானும் ஒரு நாள் மருமகளாக இருந்தவள்தான் என்று நினைத்து விட்டால், மாமியார்/மருமகள் கொடுமையை எளிதாக குறைத்துவிடலாம்தானே?

அடுத்து ஜோக்குகளைப் பாருங்கள், மனைவி எப்போதுமே கணவனைக் கொடுமைப் படுத்துபவள், மனைவிக்கு கணவனின் மீது அன்பே இல்லை என்பதுபோல் பலரும் ஜோக்குகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அவை எல்லாமே ஆணாதிக்க வெளிப்பாடு தான்.

அரசியலில் பெண்களின் மீது காட்டப்படும் கொடுமை மிக மிக அதிகம்.  நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதிகளில் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவீத ஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வருவதில்தான் எத்தனை கருத்து மோதல்கள்?  ஒரு பிரச்சினை வந்தபோது தன் மனைவியை முதல்வராக்கியவர் இன்று இந்த சட்டத்தையே எதிர்க்கிறார்.  காலம் கனிந்து, அந்த சட்ட முன் வடிவு இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படலாம் என்று தெரிகிறது. மேலும், சட்டம் வந்து விடக் கூடிய வாய்ப்பும் பிரகாசமாகத் தெரிகிறது.

ஆனாலும், சட்டம் வந்துவிட்டால் மட்டும் மகளிருக்கு சம உரிமை கிடைத்துவிடும் என்று தோன்றவில்லை. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மகளிர் ஒதுக்கீடு இருந்தும், அவர்கள் பொம்மைகளாகவே இருந்து, அவர்களின் உறவினர்களான ஆண்களின் கட்டுப்பாட்டில் அந்த வார்டு/நகராட்சி/ஊராட்சி இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.

உண்மையில் ஒரு மனிதருக்கு மதிப்பு என்பது இயல்பாகக் கொடுக்கப் படவேண்டும். அதுபோல், பெண்ணுக்கு மதிப்போ, உரிமையோ இயல்பாகக் கிடைக்க வேண்டும்.  தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் ஒரு காட்சி : நிழல்கள் ரவி மாதவியைப் பார்த்துக் கூறுவார், "நீ கவலையே படாதே, உனக்கு முழு சுதந்திரம் நான் கொடுக்கிறேன்" அதற்கு மாதவி கூறுவார் "என்ன - சுதந்திரம் - நீ கொடுக்கிறியா? தேவையே இல்லை, என் சுதந்திரத்தை நான் பார்த்துக்கிறேன்" என்று.  அந்த வசனம் என் நெஞ்சில் என்றும் நீங்காத வசனம்.என்னதான் ஆணாதிக்க உலகம் எதிர்த்து வந்திருந்தாலும், பெண்கள் தங்கள் சக்தியைப் பல முறை நிரூபித்து இருக்கிறார்கள்.  

இன்று அகில உலக மகளிர் தினம். அது மட்டுமல்ல, இந்த ஆண்டு இந்த தினம் நூறாவது ஆண்டாக கொண்டாடப் படுகிறது.  ஆம் 1910 ல் முதன் முதலில் மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. அந்த ஆண்டில்தான் கிளாரா ஜெட்கின் என்ற ஜெர்மானியப் பெண்மணி முன் மொழிய, மகளிர் தினம் கொண்டாடப் படத் தொடங்கியது. (தகவலுக்கு உதவி செய்த வலைமனைக்கு நன்றி!)


இனியாவது பெண்கள் வீட்டின் கண்கள் என்று வெறுமனே கவிதை பாடிக் கொண்டிருக்காமல், பெண்களை உண்மையிலேயே ஆண்களுக்கு சமமாக மதித்து அந்த சக்தியை உலக முன்னேற்றத்துக்கு பயன்படுத்த எல்லோரும் முனைய வேண்டும்.

"மங்கையராகப் பிறப்பதற்கே, என்றும் மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்ற கவிமணி தேசியவினாயகம் பிள்ளையின் வரிகள் அவர்களின் பெருமையைப் பறை சாற்றும்.


அப்படி மாதவம் செய்து பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும்
என் இனிய மகளிர் தின வாழ்த்துகள்! 

Sunday, March 7, 2010

வாழ்க்கை - ஆன்மீகம்

-----------------------------------------------------------------------




ஆன்மீகம் என்பதை விளக்க வேண்டுமென்றால்,

டிஸ்கி 1 : என்ன எதுவுமே எழுதவில்லையே என்று நினைத்தீர்களா? உண்மையான ஆன்மீகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மெளனமாக நம் மனத்திலேயே இறைவனை சிந்தித்து நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் புண்ணிய பாவங்களை நினைத்து நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை பிறருக்கு பயன்படும் வகையில் தொடர்வதே ஆன்மீகத்தின் சிறப்பு என்பது என் கருத்து.