அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, April 25, 2010

சண்டேனா ஒண்ணு - 25.04.2010

ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குகிறோம். அந்தப் பொருளை விற்றவர் நம்மிடம் வந்து அந்தப் பொருளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று உபதேசம் செய்யும்போது நாம் சும்மா இருப்போமா? ஒரு வேளை அந்தப் பொருளை நாம் வீணாக்கி விட்டால் அவர் நம்மைத் திட்டுவதை நாம் விரும்புவோமா? "இதோ பார், எப்ப இந்தப் பொருளை நான் உன்னிடம் விலை கொடுத்து வாங்கிவிட்டேனோ, இது என் உடமை, உனக்கு கேள்வி கேட்க உரிமை கிடையாது" என்று கறாராகச் சொல்லுவோம் தானே? அதே போல், நாம் காசு வாங்கிக் கொண்டு கொடுத்த பொருளை ஒருவர் எப்படி உபயோகித்தாலும், அல்லது வீணாக்கினாலும் அது குறித்து நாம் கவலைப் படுவோமா, அப்படியே கவலைப் பட்டாலும் பொருளை வாங்கியவர் நம்மை லட்சியம் செய்வாரா?
மத்திய அமைச்சர் அழகிரி மக்களவைக்கு வராததைப் பற்றியோ, அவர் மக்களுக்குத் தன் ஜனநாயகக் கடமையைச் சரிவர ஆற்றவில்லை என்பதைப் பற்றியோ, விமரிசிக்க நமக்கு உரிமை இருக்கிறதா என்று யோசியுங்கள்.  எப்போது, காசும் கறியும் வாங்கிக் கொண்டு வோட்டு போட்டோமோ, அப்போதே அவர் தன் பதவியைக் கொண்டு நமக்கு நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பை மூட்டை கட்டி விட வேண்டாமா? நான் காசு எதையும் வாங்க வில்லை, நான் அவருக்கே வோட்டு போடவில்லை என்று யாராவது கூறினால், அவருக்குச் சொல்கிறேன் "நீங்கள் அவரை இந்தப் பதவியில் அமர வைக்கவில்லை என்னும்போது அவரைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை"

மொத்தத்தில் திருந்த வேண்டியது திருவாளர் பொதுஜனம் தானே தவிர, அரசியல்வாதிகளை இதில் குற்றம் சொல்லிப் பயனில்லை.

"காசுக்கு வோட்டு, மக்கள் உரிமைக்கு வேட்டு"




Saturday, April 24, 2010

யதார்த்த சிறுகதைகள் - 1

"ஏய், என்ன பண்ணிக்கிட்டு இருக்கே, காதுல விழலையா?" இரைந்தார் கதிரேசன்.
"இதோ வந்துட்டேங்க", வேகமாய் அருகே வந்த மனைவி கமலாவை ஒரு அறை விட்டார். "எங்கேடி என் டூத் பேஸ்ட்?"
"இதோ இருக்குங்க" பதட்டமாய் வந்து கொடுத்த மனைவியை மீண்டும் முறைத்தார், பிறகு பாத் ரூமுக்குள் நுழைந்தார்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த கதிரேசன் மீண்டும் கத்தினார், "ஏய், கமலா, எங்கே என்னுடைய அந்த மஞ்சள் கலர் ஜிப்பா? ஏதாவது ஒன்னு இந்த வீட்டில வச்சது வச்சபடி இருக்கா?"

ஜிப்பாவுடன் வந்த மனைவியிடம் கேட்டார், "அறிவு இருக்கா, முட்டாளா நீ? ஒரு மனைவி தன்னோட கணவனுக்கு குறிப்பறிஞ்சு பணிவிடை செய்யணும். உங்க வீட்டில எதுவுமே சொல்லித் தரலியா? கேவலம் இந்த ஜிப்பாவக் கூட அயர்ன் பண்ணி வைக்கனும்னு தோணலியா?" சரமாரியாகக் கேள்வி கேட்ட கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தோன்றாமல் சிலையாக நின்றிருந்தாள் கமலா. "இவ்வளவு கத்துறேன், கொஞ்சமாவது பதில் சொல்லனும்னு தோணுதா, அறிவு கெட்ட கழுதை, ஒரு பொட்டப் புள்ளைக்கு இவ்வளவு ஆகாது" மேலும் முணுமுணுத்துக் கொண்டே ஜிப்பாவைப் போட்டபடி நடந்தார்.

சாப்பாட்டு மேசைக்கு வந்த கணவனுக்கு ஒரு தட்டை எடுத்து வந்து அதில் சில இட்லிக்களை வைக்க ஆரம்பித்ததும், அந்த தட்டை அவள்மேல் வீசி எறிந்தார். "எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இட்லி வேண்டாம்னு, இந்த வீட்டில டிபன் என்ன பண்ணனும், சாப்பாடு என்ன பண்ணும்னு என்னைக் கேட்டு செய்யணும். ஒரு பொம்பளை புருசன் வீட்டில எப்படி நடந்துக்கணும்னு உங்க வீட்டில சொல்லித் தரலியா?  அசட்டுக் கழுதை" என்று இரைந்துவிட்டு விடு விடுவென்று எழுந்தவரின் காலைப் பிடித்துக் கொண்ட கமலா, "என்னை மன்னிச்சுடுங்க, நேத்திக்கு இரவு நீங்க ஒரு மணிக்கு வந்தீங்க, அப்ப நீங்க தான் இட்லி பண்ணச் சொன்னீங்க....." ஆரம்பித்த கமலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "எதுத்தா பேசறே, சரி அப்ப சொன்னேன், இட்லி வேணும்னு, இப்ப சொல்றேன், இட்லி வேண்டாம்"
"அய்யய்யோ, சாப்பிடாம போகாதீங்க. ஒரு நிமிஷம் நீங்க என்ன சொல்றீங்களோ, அந்த டிபனை செய்யறேன். தயவு செஞ்சு சாப்பிட்டுட்டுப் போங்க" கமலாவின் கதறலைப் பொருட்படுத்தாமல் வெளியே சென்றார் கதிரேசன்.

- - - - - o - - - - -

"ஆகவே, தோழிகளே, நம் பெண்ணினம் தலை நிமிர உழைப்பவரும், பெண்களுக்கு சம உரிமை தராத அரசாங்கத்தை எதிர்த்து பல போராட்டம் நடத்திவருபவரும், எந்த ஒரு தனிப் பெண்ணுக்கும் இழுக்கோ, துன்பமோ நேராத நிலை வர வேண்டும் என்று அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவருமான நம்முடைய ஒரே தலைவர் இப்போது உங்களிடையே பேசுவார்" என்று அந்தப் பெண்மணி மைக்கில் கூற,

"என்னை ஈன்ற தாயினும் மேலான என் தமிழ்ப் பெண்ணினமே" என்று ஆரம்பித்தார் கதிரேசன்.

Thursday, April 22, 2010

எண்ணங்களை எழுதுகிறேன்

 எல்லோரும் அலசி ஆராய்ந்து ஒருவருக்கு ஒருவர் சொல்லடி (அதுவும் உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை) அடித்துக் கொண்டு வரும் விஷயம் விடுதலைப்புலி பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரம்.

இதில் நானும் ஏதாவது சொல்லவில்லை என்றால் என்னாவது?

பார்வதி அம்மாள் தமிழர் என்பதை மறந்து விடுங்கள். அவர் மகன் இந்திய அரசின் பார்வையில் கொலைக் குற்றவாளி என்பதையும் மறந்து விடுங்கள். அவர் ஒரு வயதான, நோய்வாய்ப்பட்ட, எண்பது வயது மூதாட்டி. முறையாக இந்தியா வருவதற்கு விசா வழங்கப் பட்ட வெளிநாட்டுப் பயணி. அவரின் வயதையும் நோயின் தன்மையையும் கணக்கில் கொண்டாவது அவருக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு வேளை அவரால் இங்கு ஒரு குழப்பம் விளையும் என்று நினைத்திருந்தால் அவரை காவல் துறையின் மேற்பார்வையிலாவது மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.  ஒருவரால் குழப்பம் ஏற்படும் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்; ஆனால் ஒரு சிறந்த அரசு நிர்வாகி என்று தன்னை நினைத்துக் கொள்ளும் யாரும் சொல்லக் கூடாது.  அப்படி ஒரு குழப்பத்தை முன்கூட்டியே கணித்து அதைத் தவிர்க்க இயலாதவர்கள் அரசு நாற்காலியைத் துறந்து விடவேண்டும்.

வாழ்க அரசின் சட்ட ஒழுங்கு கரிசனம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------

அரசு நிர்வாகத் திறமைக்கு இன்னொரு சான்று இதோ:

என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருந்து வாங்க கடைக்கு சென்றேன். ஒரு அதிர்ச்சி தகவல். எனக்கு ஒரு மருந்து (இரண்டே இரண்டு மாத்திரைகள் தான்)வேண்டும்; ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். சில மருந்துகளை பத்து பத்தாகத் தான் (அதாவது ஒரு பட்டையாக) வாங்க வேண்டுமாம். அப்படித்தான் விற்கச் சொல்லி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாம். சமீபத்திய "போலி மருந்து விற்பனை" விவகாரத்திற்குப் பின்னர் அரசு எடுத்திருக்கும் அதிரடி முடிவு இதுவாம்.  ஏனென்றால் ஒரு பட்டையாக இருந்தால் தான் அந்த மருந்தின் batch No., Expiry date போன்றவற்றை அறிய முடியுமாம்.

இது என்ன பைத்தியக்காரத் தனம்? பொதுவாக நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் நலம் பெறத் தான் எவரும் விரும்புகிறார்கள்.  அரசின் இந்த உத்தரவின்படி குறைந்தது பத்து நாட்கள் ஒருவர் உடல் நலமில்லாமல் இருக்க வேண்டும். போலி மருந்து விற்ற குற்றவாளிகளின் மீது முறையான நடவடிக்கை எடுத்து இது போன்ற முறைகேடுகள் இனிமேல் நடக்காத மாதிரி சட்டம் இயற்றுவதை விட்டுவிட்டு இதுபோல் மக்களை தேவையற்ற அளவில் மருந்து வாங்க வைப்பதை நினைத்தால்................ 

வாழ்க அரசின் மக்கள் நலக் கரிசனம்!   


டிஸ்கி : மக்களே, நானும் அரசியல் பேச ஆரம்பிச்சுட்டேன், கேட்டுக்குங்க, நானும் ரவுடிதான், ரவுடிதான்!

Sunday, April 18, 2010

வாங்க வரையலாம்

மங்குனி அமைச்சரின் இந்தப் பதிவைப் படிச்சா சுவையா வெஜ் சாம்பார் செய்வது எப்படி என்று சுவையாக சொல்லியிருக்கிறார். இது படிச்சவுடனே எனக்கு எஸ். வி. சேகர் காமெடி ஞாபகம் வந்ததால், இங்கே ஒரு ஓவியத்தை வரைந்திருக்கிறேன். பார்த்து ரசிக்கவும்.
ஒரு ரயிலிலிருந்து பயணிகள் இறங்குகிறார்கள்.
டிஸ்கி : படத்துக்கான விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.(Ctrl + a அடித்து படித்துக் கொள்ளவும்)  
என்ன பயணிகள் யாரையுமே காணலைன்னு பாக்கறீங்களா? அவங்கவங்க இறங்கினதும் வீட்டுக்குப் போயிட்டாங்க, அதான்.
சரி, ட்ரெயின் எங்கன்னு கேட்கறீங்களா? பயணிகள் இறங்கியதும் ட்ரெயின் போயிடுச்சு.
தண்டவாளமா, அது போன வருஷம் பெஞ்ச மழையில காணா போயிடுச்சு. இதே போல, எரோப்லேனிலிருந்து மக்கள் இறங்கறா மாதிரி, பஸ்லேர்ந்து இறங்கறா மாதிரி பல ஓவியங்களை நீங்களே வரையலாம்.

காமெடி உதவி : நடிகர்/எம்.எல்.ஏ திரு. எஸ்.வி.சேகர்.

சண்டேனா ஒண்ணு - 18.04.2010 (ஐ.பி.எல்.லும் இந்தியப் பொருளாதாரமும்)



ஐ.பி.எல். (Indian Premier League) என்ற ஒன்று; அதன் தலைவர் லலித் மோடி; அவரின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

ஐ.பி.எல். அணிகளை வாங்குவதில் உள்ள போட்டா போட்டிகள் என்ன, அதில் புரளும் பணத்தின் அளவுதான் என்ன, ஐ.பி.எல். விளையாட்டுக்களைப் பற்றி செய்திகளை முந்தித் தரும் ஊடகங்களின் ஆர்வம்தான் என்ன.....என்று அவ்வையார் மாதிரி கேள்வி கேட்க ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது. இதில் மத்திய மந்திரியின் பெயர் வேறு அடி படுகிறது.

அப்படியாவது அதில் ஏதாவது சுவாரசியமாக இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை (என் கண்ணோட்டத்தில் சொல்கிறேன்). ஒரே அணியில் பல நாட்டு வீரர்கள் என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் என் கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்த நாட்டில் மட்டும்தான் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் அரசும் மக்களும் ஈடுபடுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

டிஸ்கி : இதில் பொருளாதாரத்துக்கு என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சொல்ல மறந்து விட்டேனே, 2005 ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 42 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கிறார்கள். (அதாவது நாள் ஒன்றுக்கு 22 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள்). ஆதாரம் : விக்கிபீடியா 

Sunday, April 11, 2010

திரை விமரிசனம்

பொதுவாகவே அந்தக் காலத்து மனிதர்கள் கொஞ்சம் ஓபன் டைப்.  அதனாலேயே, அவர்கள் வீட்டு வாசல்கள் பெரியதாகவும், அநேகமாக வாசல் திண்ணைகளில் ஓய்வு எடுக்க வசதியாக, அதுவரை கதவுகள் இல்லாமலும் அமைந்திருக்கும்.  யார் வேண்டுமானாலும், அந்த திண்ணைகளில் வந்து ஓய்வு எடுக்கலாம். வீடுகளுக்குள் கூட, அநேகமாக பெரிய அறைகள் எதுவும் இருக்காது.

ஆனால், நாகரிகம் வளர, வளர, பெருகி வரும் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு இப்போதெல்லாம் திண்ணை வைத்த வீடுகளே கட்டப் படுவது கிடையாது.  சொல்லப் போனால், இருக்கிற திண்ணை வீடுகள் கூட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

கதவுகளைவிட, வீடுகளில் பயன்படுத்தப் படும் திரைச் சீலைகள் பெரும்பாலும் ரசனைக்கு உரியவையாக இருக்கின்றன.  சில வகை திரைச் சீலைகளைப் பற்றி ஒரு அலசல்:-

Tab Top Curtains :

இந்த வகை திரைச் சீலைகள் ஒரு முனையில் நாடாக்கள் வேயப்பட்டு அவை ஒரு கம்பியில் கோர்க்கப் பட்டு தொங்க விடப் படும்.
Tab Top Curtains




Shower Curtain :
இவை பெரும்பாலும் குளியலறைகளின் வெளியில் தொங்க விடப் படும்.

Blinds:
இவை பெரும்பாலும் செவ்வகப் பட்டைகள் கோர்க்கப் பட்டதாக அமையும். ஒரு பக்கத்தில் இருக்கும் இரு கயிறுகளில் ஒன்றை இழுக்கும்போது மூடும் வகையிலும், இன்னொன்றை இழுக்கும்போது திறக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.
Windows blinds

Eyelet Curtains :

இந்த வகை திரைகளில் ஒரு முனையில் வட்டங்களாக ஓட்டைகள் இருக்கும். அந்த ஓட்டைகள் வழியாக கம்பியில் கோர்க்கப் பட்டு தொங்கவிடப் படும்.

image of Finest Oban Texture Weave Lined Eyelet, Red 163X229cm
Bamboo Curtains :
இந்த வகை திரைகள், மூங்கில் குச்சிகளால் கோர்க்கப்பட்டு தொங்க விடப் படும்.

See full size image

டிஸ்கி :  பல பதிவர்கள் திரை விமரிசனம் எழுதுகிறார்கள். நானோ அப்படி எழுதுவதில்லை என்பதை யோசித்துக் கொண்டிருந்தபோது, மாதவனின் இந்தப் பதிவைப் படித்தேன். மாத்தி யோசித்தபோது இப்படி ஒரு "திரை" விமரிசனம் எழுதலாம் என்று தோன்றியது.

டிஸ்கிக்கு டிஸ்கி :  பின்னூட்டம் போட்டுப் பழக்கம் இல்லாதவங்க, மாத்தி யோசிச்சு பின்னூட்டம் போடுங்க.  வழக்கமா போடறவங்க, மாத்தி யோசிக்காம, பின்னூட்டம் போடுங்க.

சண்டேனா ஒண்ணு - 11.04.2010



மேலே உள்ள புகைப்படத்தை சென்ற வெள்ளிக்கிழமை தேதியிட்ட தினத்தந்தியில் பார்த்திருக்கலாம்.  தெரியாதவர்களுக்காக இந்த விபரம்.  சென்னையில் ஒரு இடத்தில் தண்டவாள ஓடுபாதைக்கு மேலே மேம்பால வேலை நடந்து கொண்டிருக்கிறது.  இரு பக்கமும் கட்டப்பட்ட நிலையில் நடுவில் இன்னமும் முடிக்கப் படாமல் இருக்கிறது.  இந்த விவரம் தெரியாமல் ஒரு நபர் தன் காரை இந்த மேம்பாலத்தின் மேல் ஓட்டி வந்து கார் கீழே விழுந்து விட்டது.  இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கார் விழுந்த தண்டவாளத்தில் அல்லாமல் வேறொரு தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்திருக்கிறது. ஆகவே, ஓட்டி வந்த நபர் காயங்களுடன் தப்பி விட்டார். (போட்டோ உதவி : தினத் தந்தி)

இங்கே எனக்கு வந்த சந்தேககங்கள் :

மேம்பால வேலை நடை பெறுகிறது : Take Diversion என்ற எச்சரிக்கை போர்டு இரு பக்கமும் வைக்க வில்லையா? அப்படி என்றால் அவ்வாறு எச்சரிக்கை செய்யாத அரசுத் துறை மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

"சாலை பாதுகாப்பு வாரம் - போக்குவரத்து விதிகளை மதியுங்கள்" என்பதெல்லாம் பொது மக்களுக்குத்தானா? அரசு அதிகாரிகளுக்கு இல்லையா?

என்ன கொடும சார், இது? 

டிஸ்கி : மக்களே, எது எப்படி இருந்தாலும், நாம் போக்குவரத்து விதிகளையும், (போக்குவரத்து விதிமீறல்களையும்) புரிந்து கொண்டு அனுசரித்து போவது, நம்முடைய வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று.

Sunday, April 4, 2010

சண்டேனா ஒண்ணு - 04.04.2010

-----------------------------------------------------------------------------

என் மதிப்புக்குரிய இட்லிவடை சண்டேனா ரெண்டு தொடரை போன வாரத்தோட (தற்காலிகமாதான்) நிறுத்தி வச்சதால, நான் இந்த சண்டேனா ஒண்ணு பகுதியைத் தொடங்குகிறேன். இதில என் சிந்தனையை அதிகமா தூண்டின அந்தந்த வாரத்து செய்தியைப் பத்தி எழுதலாம்னு இருக்கேன்.

சென்ற வாரத்துல அதிகமா பேசப்பட்டு வந்த விஷயம் பென்னாகரம் இடைத்தேர்தல் தான்.  இந்த இடைத்தேர்தலிலும்  பணம் அதிகமா கொடுக்கப்பட்டதாக பெரும்பாலான ஊடகங்களில் சொல்லப்பட்டு வந்தது. இதுபோல் பணம் மட்டுமே வாக்குகளைச் சேகரிக்க உதவும் என்றால் ஜனநாயகம் என்பது பணநாயகம் என்று கேலிக்கு ஆளாகி விடாதா என்று நடுநிலையாளர்கள் வருந்துகிறார்கள்.

பொதுவாவே, தேர்தல் சமயத்தில் வாக்காளர்களைக் கவரும் பொருட்டு பல வாக்குறுதிகளை எல்லா கட்சிகளும் வாரி வழங்குவது என்பது கடந்த கால சரித்திரம்.  என் நினைவு தெரிந்து எண்பதுகளில் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு காரில் கொண்டு விடுவது என்பதே தடை செய்யப் பட்ட ஒன்று.  (இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்) ஆனால், இப்பொழுதோ, வாக்குறுதிகளை விட பணத்தைத்தான் அதிகம் பேர் விரும்புகிறார்கள்.

எனக்கு என்னவோ இதில் அரசியல் கட்சிகளைக் குறை கூறுவதில் உடன்பாடு இல்லை. காசு கொடுக்கிறார்களா, வேண்டாம் என்று சொல்லுங்கள்.  மிரட்டுகிறார்களா, பரவாயில்லை, வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் வாக்குகளை உங்கள் விருப்பம்போல் அளியுங்கள்.  ஐயோ, காசு வாங்கி விட்டோமே, எப்படி மாற்றி வாக்களிப்பது? என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.  காசு கொடுப்பவர்கள் நிச்சயம் யோக்கிய சிகாமணிகள் இல்லை. அது மட்டுமல்லாமல், காசு வாங்காது போனால், அவர்கள் அராஜகச் செயலைச் சந்திக்கும் துணிவோ, மன வலிமையோ நமக்கு இல்லை என்பதால் தான் அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்க வேண்டியிருக்கிறது.  அது போக, காசு பணம் செலவழித்தாலும் நல்ல பெயர் வாங்கினால்தான் வோட்டு கிடைக்கும் என்பது புரிந்தால் நாளாவட்டத்தில் இந்த வோட்டுக்கு காசு என்ற கான்செப்ட் தன்னால் காணாமல் போய்விடும்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.....காசுக்கு வோட்டு என்பது நல்லாட்சிக்கு வேட்டு.

டிஸ்கி : காசு வாங்கிட்டு ஓட்டு போடுங்கன்னு நான் சொல்லலை, காசு வாங்கினாலும், வாங்காவிட்டாலும் வாக்குரிமையை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்றுதான் சொல்லுகிறேன்.  

  

Friday, April 2, 2010

டாப் 10 பதிவர்கள் - என் பார்வையில்

---------------------------------------------------------------------------------
எல்லோரும் ஜோரா கை தட்டுங்க, இது என்னோட ஐம்பதாவது பதிவு.

எனக்கு வலைப்பூக்கள் பரிச்சயம் 2006 லேயே வந்து விட்டது என்றாலும் முழு அளவில் நானே ஒரு வலைப்பூ துவங்கியது சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில்தான். ஒரு காமெடிக்காக(?) பெயர் சொல்ல விருப்பமில்லை என்ற பெயருடன் துவங்கிய என்னுடைய வலைப்பூ ஓரளவு பிரபலத்துடன் விளங்கி வருவதாக என் எண்ணம். (யாருப்பா, அங்கே நமுட்டு சிரிப்பு சிரிக்கிறது? சின்ன புள்ளத் தனமா இல்ல?)
கிட்டத்தட்ட இந்த ஆறு மாதத்தில் என்னுடைய வலைப்பூவை பின்தொடரும் followers எண்ணிக்கை 49.   அந்த நாப்பத்து ஒன்பது பேருக்கு நன்றி!

அவரவர் ஒரு நாளைக்கே ரெண்டு மூணு பதிவு போடும்போது, வாரத்துக்கு ஒரு பதிவு சமயத்துல ரெண்டு வாரத்துக்கு ஒரு பதிவு போடறதுக்கே இங்க மூச்சு முட்டுது.

சரி என்னோட ஐம்பதாவது பதிவா என்ன போடலாம்னு யோசிச்சப்போ, என் மனசுக்குப் பிடிச்ச டாப் 10 பதிவர்களைப் பற்றி எழுதலாம்னு தோணுது.  

இதோ என் டாப் 10 பதிவர்கள் :-

1. இட்லிவடை எனக்கு முதன்முதலில் அறிமுகமான வலைப்பூ. ஆரம்பத்தில் அறிவியல் சம்பந்தமான செய்திகள் பலவற்றை இங்கே படித்திருக்கிறேன்.  அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையோடு சொல்வதில் இட்லிவடையின் பாங்கு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சக பதிவர்களுக்கு அனேக போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி (எனக்கும் ஒரு பரிசு கிடைத்தது - விவரம் இங்கே)  கிட்டத்தட்ட ஆயிரம் பின்தொடர்வாளர்களுடன் (சரியான மொழிபெயர்ப்பு என்றே நினைக்கிறேன்) சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் இட்லிவடை என்னுடைய தினசரி காலை உணவு என்றே சொல்லலாம்.

2.  டோண்டு ஒரு மொழிபெயர்ப்பாளராக தன்னுடைய அனுபவங்களையும், ஒரு பக்திமானாக தன்னுடைய எண்ணங்களையும் ஒரு சிறந்த நிபுணராக பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் இவரது வலைப்பூவையும் அநேகமாக தினமும் படித்து விடுகிறேன், ஆனால் எப்போதாவதுதான் என் பின்னூட்டத்தை இடுகிறேன். போலி டொண்டுவினால் அவதிப் பட்டபோது தளராது போரிட்டு வெற்றிக் கனியை ருசித்தவர். கிட்டத்தட்ட 250 பின்தொடர்வாளர்களுடன் என் மனத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த வலைப்பூ. எல்லாம் வல்ல தென்திருப்பேரை மகர நெடுங்குழைக் காதர் இவரை நன்கு காக்கட்டும்.

3. கேபிள் சங்கர் ஒரு சிறந்த இயக்குனர் ஆவதே தனது லட்சியமாகக் கொண்டிருக்கும் இவர் என்னுடைய சிறந்த நண்பர். இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் (எல்லாரும் கேட்டுக்குங்க, நானும் யூத்துதான்) இவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது. இவருடைய பின்தொடர்வாளர்களுடைய எண்ணிக்கை 750 ஐ  நெருங்குகிறது.  அநேகமாக இவருடைய எல்லா பதிவுகளும் கொஞ்சம் ரொமான்டிக்காக இருக்கும் (யூத்துப்பா....) இவருடைய கொத்து பரோட்டாவின் மூலம் நிறைய உணவகங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார் (ரொம்ப அசைவ உணவுகளையே அறிமுகப் படுத்துவார், இவருடைய ஜோக்குகளைப் போல).

4. எடக்கு மடக்கு கோபி இவர் தான் என் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டவர் என்ற முறையில் இவரை ரொம்பப் பிடிக்கும். இவரிடம் chat செய்வது சுவாரசியமாக இருக்கும். வாழ்க்கை பற்றி சில பதிவுகளை நான் எழுத இவரின் தொடர் தான் காரணம். இப்போதும் வெற்றிக்கு வழி என்ற பெயரில் நிறைய தன்னம்பிக்கையூட்டும் தொடரை எழுதி வருகிறார். கோபி என் சிறந்த நண்பர். (அவர் என்னை விட இளையவர் - யூ....யூத்து!)

5. குசும்பன்  பெயருக்கு ஏற்றாற்போல் குசும்பு நிறைந்தவர்.  எப்பேர்பட்ட நரசிம்மராவ்களையும் சிரிக்க வைத்துவிடுவார் என்பது என் எண்ணம். எங்கள் (மன்னார்குடிக்குப் பக்கத்தில்) தஞ்சாவூர் காரர் என்பதால் இவர் மீது சிறப்பு கவனம் எப்போதும் இருக்கும்.

6. நாஞ்சில் எக்ஸ்பிரஸ் பிரதாப் : நாகர்கோயில் தம்பி.  என்னைவிட பத்து வயது இளையவர். (யூ...யூ....யூத்து!) சினிமா விமரிசனம், மொக்கை, நகைச்சுவை என்று பதிவுகளில் களை கட்டுபவர். இவருடைய எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்வது நன்றாக இருக்கும் என்றாலும் பல நேரம் வித்தவுட் தான் (பின்னூட்டம் போடாமல் வந்துவிடுவேன் ஹி....ஹி..) அவரும் அப்படித்தான் என் பதிவுக்கு பல நேரம் பின்னூட்டம் போடுவதே இல்லை.

7. தண்டோரா மணிஜீ - முதன் முதலில் இவருடைய இந்த பதிவைத்தான் படித்தேன். முதலில் புரியவில்லை. சற்று யோசித்தபோது மலைத்துப் போனேன், இப்படியும் அரசியல் கதை எழுத முடியுமா என்று.   இவருடைய கதைகள், கவிதைகள் எல்லாமே அருமையாக இருக்கும்.

8. ராஜூ மிக மிக இளம் வயது. ஆனால் நகைச்சுவை உணர்வு மிக மிக அதிகம். கேபிளாரைக் கேட்டால் சொல்லுவார், இவரின் நகைச்சுவைத் திறனை. இவருடைய பதிவுகள் அனைத்தும் நகைச்சுவைதான், சில சிந்திக்க வைக்கும் சமூக உணர்வுக் கட்டுரைகளைத் தவிர.

9. எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் உள்ளிட்டோரின் கூட்டணியில் வெளிவரும் இந்த பதிவில் ஒரு விசேஷம் நிறைய போட்டிகள் வைப்பார்கள். பாயிண்ட்டுகள் தருவார்கள். சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் நிறைய இருக்கும்.

10. வீடு திரும்பல் மோகன்  என் பள்ளிக் கால நண்பன். இவனுடைய ஒரு பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு இவனுடைய வலைப்பூவை அறிந்தேன். இவனுடன் என் பள்ளிக்கால அனுபவத்தை இங்கே எழுதியிருக்கிறேன். வானவில் என்ற பெயரில் வாரா வாரம் பல நல்ல தகவல்களை/எண்ணங்களை தந்து வருகிறான்.

இன்னும் பல வலைப்பூக்கள் என்னால் கவனிக்கப் படுபவைதான். என்றாலும் என்னைக் கவர்ந்த டாப் 10 வலைப்பதிவர்களைப் பற்றித் தான் இங்கே எழுதியிருக்கிறேன்.

டிஸ்கி : எப்படியும் முதல் இரண்டு பதிவர்களும் பின்னூட்டம் இட மாட்டார்கள். மற்ற எட்டு பேரும், மேலும் பிற பதிவர்களும் தங்கள் கருத்துகளை சொல்லிட்டுப் போங்க.  

(எமது அடுத்த வெளியீடு : என்னைக் கவர்ந்த டாப் 10 பின்னூட்டாளர்கள்)

வாழ்க்கை - கற்பு

 -----------------------------------------------------------------------------------

இந்த வார துக்ளக்கில் வந்த ஒரு தொடர் (ராண்டார் கை அனுபவங்கள்) பற்றி இந்த பதிவு.

மேற்கண்ட தொடரில் ராமாபட்டினம் ஜமீந்தார் கேஸ் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதில் ஒரு விஷயம் என்னவென்றால் ராமாபட்டினம் ஜமீன்தார் வேறு ஒரு பெரிய எஸ்டேட் முதலாளியின் இரண்டாம் தாரத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதற்கு அந்த எஸ்டேட் முதலாளி எப்படி பழி தீர்த்துக் கொண்டார் என்றும் எழுதப் படுகிறது.

எனக்குத் தோன்றியது இதுதான்; ஒரு ஆண் இன்னொரு ஆணின் மனைவியைக் காதலிக்கிறார். அவர் என்னவென்றால் இரண்டு மனைவிகள் வைத்திருக்கிறார். ஆக, இவர் செய்தது ஒரு வகையில் தவறு என்றால் அவர் செய்ததும் தவறுதானே.  ஊருக்கே தெரிந்து இரண்டு தாரம் வைத்திருப்பது எப்படி தவறு ஆகும் என்று யாரும் எதிர் கேள்வி கேட்க வேண்டாம்.  பொதுவாகவே, நம் சமுகத்தில் ஆண் எவ்வளவு பெண்களை வேண்டுமானாலும் விரும்பலாம் ஆனால் பெண் மட்டும் ஒருவனையே நினைத்து வாழ வேண்டும்.

அதற்காக, பெண்களும் பலரை மணந்து, புரட்சி செய்ய வேண்டும் என்று சொல்ல வரவில்லை.  கற்பு என்பது இருபாலருக்கும்தான் என்பது என் கருத்து.பாரதி கூட கற்பை இருபாலருக்கும் பொதுவாக வைத்துத்தான் கவிதை புனைகிறான்.

ஒரு முறை சொந்த ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு பணி மாற்றம் காரணமாக நான் செல்ல வேண்டியிருந்தது.  முதலில் நான் மட்டும் அந்த ஊருக்கு சென்று பிறகு குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்ல திட்டம்.  அதற்காக அந்த ஊரில் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் விளையாட்டாகச் சொன்னார் :
"ஏம்பா, இருக்கப் போவது இங்க இரண்டு வருஷம்தான். அதுக்கு ஏன் குடும்பத்தை இங்க கூட்டிக்கிட்டு வரணும்? பேசாம இங்கயே ஒரு குடும்பத்தை செட் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டியதுதான?"

அதற்கு நானும் விளையாட்டாகச் சொன்னேன், "சரிதான் பா. ஆனா, இரண்டு வருஷம் கழித்து என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகும்போது அங்க என் மனைவி வேற ஒரு குடும்பத்தை செட் பண்ணியிருந்தா என்ன பண்றது?"

இதில் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எப்படி ஒரு மணமான பெண்ணுக்கு பிற ஆடவர்களிடத்தில் ஆசை கூடாது என்று விரும்புகிறோமோ அதுபோல் ஒரு மணமான ஆணுக்கு பிற பெண்களிடத்தில் எள்ளளவும் ஆசை வரக்கூடாது.

"இப்பிறவியில் பிற மாதரை சிந்தையாலும் தொடேன்" என்ற ராமனை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என்பதே என் இறுதி வரிகள்.

Thursday, April 1, 2010

புதிய செய்தி - ப்ளுடோவில் தண்ணீர்.

--------------------------------------------------------------------------

பூமி தவிர வேறெந்த கிரகத்திலும் உயிரினம் வாழவே முடியாது என்பது இதுவரை அறிவியலின் கருத்தாக இருந்தது.

சமீபத்தில் சந்திராயன் விண்கலத்தின் மூலம் சந்திரனிலும் தண்ணீர் சுவடு இருப்பதாக தெரியவந்தது அல்லவா?



இப்போது வந்துள்ள செய்தியின் படி ப்ளுடோ கிரகத்தில் கூட தண்ணீர் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு


http://navarasam2010.blogspot.com/
 
டிஸ்கி: இதற்கு டிஸ்கி தேவையில்லையோ?