அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, August 28, 2010

தங்கமணிகிட்ட பயமா, ஹா.....ஹா......!

ச்சே, உலகத்தை நினைச்சா ஆத்திரமா வருது, அது என்ன, தங்கமணிக்கு பயப்படுறது? வெக்கமா இல்ல? கலாய்க்கறோம்னு  கோபப் படற VKS மக்களே, நீங்களே சொல்லுங்க, இது நியாயமா?
இந்தப் பதிவுல ரங்கமணிகளை எல்லாம் சந்தோஷப் பட வச்ச அவரு, இந்த பதிவுல குப்புற கவுந்துட்டாரே, இது சரியா?

இவ்வளவு பயம் இருந்தா ஏன் முதல் பதிவு போடணும்? எனக்கு என்னிக்குமே என்னோட தங்கமணிகிட்ட பயம் இருந்ததே கிடையாது, இதை நான் ஆணித்தரமா எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்யத் தயார்.  மனுசன்னு இருந்தா ரோசம் மானம் சுய கவுரவம் எல்லாம் இருக்கணும் சார், இத நல்லா புரிஞ்சுக்குங்க!

டிஸ்கி : வலையுலக மக்களே! தங்கமணின்னா  வலையுலகத்துல என்ன அர்த்தம்னு என் மனைவிகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க, அப்புறம் நானும் ஒரு (தலைகீழ்)பதிவு போட வேண்டியிருக்கும், ஹிஹி.....!

Wednesday, August 25, 2010

வாரியார் சுவாமிகள் பிறந்த நாள் -

இன்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் பிறந்த நாள். "ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே" என்று பலருக்குப் புரியாத மொழியில் ஆரம்பித்து சங்கீத உபன்யாசம் செய்பவர்கள் மத்தியில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக அழகாகப் புராணக் கதைகளை நீதிகளோடு விளக்கியவர் இவர்.

Sunday, August 22, 2010

கோபாலா....கோபாலா!

மன்னார்குடி திருவிழாக்களைப் பற்றி ஏற்கெனவே இட்லிவடையிலும் என் முந்தைய பதிவிலும் எழுதி இருக்கிறேன். அந்த சிறப்பு வாய்ந்த திருக்கோயிலின் குடமுழுக்கு விழா   இன்று காலை நடைபெற்றது. நேரில் தரிசித்த அந்த தருணங்களை என்னால் விவரிக்க இயலவில்லை.
உங்களுக்காக அந்தக் காட்சியை இங்கே தந்திருக்கிறேன்.

பொதுவாகவே கும்பாபிஷேகம் என்றால் மழை பொழியும் என்பார்கள். இரண்டு நாட்களாக நல்ல மழை இருந்தாலும், இன்று காலை முதல் மழை இல்லாமல், கும்பாபிஷேகத்தை நன்கு கண்டு களிக்க முடிந்தது.

உலகில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல், எங்கும் சண்டை சச்சரவு இன்றி உலகம் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்க எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணனை இறைஞ்சுகிறேன்.

Friday, August 20, 2010

ஐந்தே மாதங்களில் லட்சாதிபதியாக...................

யாருக்குமே பணக்காரனாக வேண்டும் என்று ஆசை இருக்கும். எப்படியாவது லட்சாதிபதி-அதாவது பல லட்சங்களுக்கு சொந்தகாரர்-ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இதோ வழிகள் இரண்டு.

முதல் வழி கொஞ்சம் சுலபம்
உங்கள் வங்கி கணக்கு எண்ணையும், உங்கள் இ-மெயில் ஐ.டி.யையும்...............தர வேண்டாம். அம்மாதிரி உங்களை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. அதே போல், குறுக்கெழுத்துப் போட்டி, ஏலச்சீட்டு போன்ற திட்டங்களும் நான் சொல்லப் போவது இல்லை. இதெல்லாம் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும். நம்முடைய உழைப்பை மட்டும் நாம் நம்ப வேண்டும் தானே?

அதனால் நீங்கள் செய்ய வேண்டியது என்னன்னா..............ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக்கு சென்று உங்கள் கணக்கில் இருபதாயிரம் ரூபாய் போட்டு வாருங்கள். சரியாக ஐந்தே மாதங்களில் நீங்கள் ஒரு லட்சத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிடலாம்.

(ஹலோ, இதுக்கே டென்சன் ஆனா எப்படி? ரெண்டாவது ஐடியாவையும் படியுங்க!)

இரண்டாவது வழி: இது கொஞ்சம் கஷ்டமான வழி. ஒரு முக்கியமான கண்டிஷனும் இருக்கு. ஆனா ஒண்ணு, இந்த வழியில சில மாதங்களிலேயே நீங்கள் பல லட்சங்களுக்கு அதிபதியாகி விடலாம். அது மட்டுமில்லை, இதுக்கு நீங்க வங்கியில பணம் போட வேண்டிய அவசியமும் இல்லை. நீங்க என்ன செய்யணும்னா, ஒவ்வொரு நாளும் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ பணம் செலவு பண்ணனும். குறைஞ்சது ஒரு மாசத்துக்கு பத்து லட்ச ரூபாய் செலவு பண்ணனும் அப்படி செஞ்சா, ரெண்டு மூணு மாசத்துலயே பல லட்சங்களுக்கு சொந்தக்காரர் ஆகலாம்.

கண்டிஷன் சொல்ல மறந்துட்டேனே, நீங்க ஆரம்பத்துலேயே கோடீஸ்வரனா இருக்கணும்!

டிஸ்கி : இந்தப் பதிவுக்கும் டிவியில் வர ஒரு விளம்பரத்துக்கும் சம்பந்தம் இருக்கு, புரிந்து கொண்டவர்கள் பின்னூட்டலாம்.

Sunday, August 15, 2010

தண்ணீர் விட்டா வளர்த்தோம்..........................?

மாவீரன் மங்கள் பாண்டே 
இது போல் ஒரு ஞாயிறுதான் , 1857 மார்ச் 29 மங்கள் பாண்டே என்ற ஒரு சிப்பாய் தன்னுடைய சுதந்திர தாகத்தை வெளிப்படுத்திய நாள். ஆங்கிலேயர் பார்வையில் சிப்பாய் கலகம் என்றும் நமது பார்வையில் முதல் சுதந்திரப் போர் என்றும் வர்ணிக்கப்படும் ஒரு மாபெரும் புரட்சி வெடித்த நாள்.

இன்று 15.8.2010 நாம் நம்முடைய அறுபத்துநான்காவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம் என்றால், இந்த மங்கள் பாண்டே, பிறகு வந்த வீரன் பகத் சிங், நேதாஜி,  போன்ற மாவீரர்கள் சிந்திய ரத்தம் தான் காரணம்.

இவர்கள் தம்முடைய வீரத்தால் போராடினார்கள் என்றால், திலகர் மற்றும் மகாத்மா காந்தி போன்ற மாமனிதர்கள் தங்கள் அஹிம்சை என்ற ஆயுதத்தை ஏந்தி விவேகத்தால் போராடினார்கள். இதெல்லாம் எதற்கு சொல்ல வேண்டும்? அதுதான் ஒவ்வொரு கட்சித் தலைவரும் கதை கதையாய்  சொல்வார்களே என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

இன்று நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு இந்த சுதந்திரக் கதையை சொல்லிக் கொடுத்திருக்கிறோம்? சுதந்திர தினம் என்றால் கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார்கள் என்பதைத் தவிர வேறேதாவது அவர்களுக்குத் தெரியுமா?

அன்று ஆங்கிலேயருக்கு அடிமையாய் இருந்தோம் என்றால்,இன்று கண் முன்னே நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்துக் கேட்கும் திராணி இல்லாமல்தானே இருக்கிறோம்? காரணம் என்ன? நாம் நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பொறுப்பாகச்  செய்யாமல், அவர்கள் தரும் வெற்று விளம்பரங்களையும், இலவசங்களையும் பார்த்து மயங்கி வீணாக்குகிறோம்.  இந்த நிலை மாறும் வரை உண்மையான சுதந்திரம் நமக்கு இல்லை.

அந்த ஒரு நன்னாள் வரும் என்ற எதிர்பார்ப்பில் உங்கள் எல்லோருக்கும் என் இனிய
சுதந்திர தின வாழ்த்துகள்! 


Wednesday, August 11, 2010

திருவாடிப் பூரம் - மன்னார்குடி திருவிழா



இது என் நூறாவது பதிவு. என்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் பின்னூட்டாளர்களுக்கு என் நன்றிகள்! என் சொந்த ஊரான மன்னார்குடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருவாடிப்பூரத் திருவிழாவைப் பற்றியே இந்த பதிவு.

மன்னார்குடி மதில் அழகு என்பார்கள். மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பெருமாள் மூலவர் பெயர் பர வாசுதேவன், உற்சவர் பெயர் ஸ்ரீவித்யா ராஜகோபால சுவாமி. அது போல் தாயார் (அதாவது அம்பாள்) மூலவர் பெயர் செண்பக லட்சுமி, உற்சவர் பெயர் செங்கமலத் தாயார். 
அருள்மிகு செங்கமலத் தாயார் 
அருள்மிகு ஸ்ரீவித்யா ராஜகோபால சுவாமி 










வருடம் முழுவதும் திருவிழாக்களால் களை கட்டும் இந்தத் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் அன்று அம்பாள் திருத்தேரில் வலம் வரும் காட்சி கண்கொள்ளாததாகும். தமிழகத்திலேயே, இரு வைணவத் திருத்தலங்களில் தான் அம்பாள் திருத்தேர் உலா வருவார். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில். மற்றொன்று, மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில்.
ஆனால், ஒரு விசித்திரம் என்னவென்றால், மன்னார்குடியில் திருக்கோயிலில், கோயிலுக்கு உள்ளேயே இந்த திருத்தேர் பவனி வரும்.


ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்திற்கு எட்டு நாட்கள் முன்னால் கொடியேற்றம் நடைபெறும். 
ஒவ்வொரு நாளும் (ஏழாம் நாள் தவிர) காலையில் பல்லக்கிலும் இரவு விதவிதமான வாகனங்களிலும் அம்பாள் பவனி வருவாள்.
இரண்டாம் நாள் அன்ன வாகனத்திலும்,
மூன்றாம் நாள் சேஷ வாகனத்திலும்,
நான்காம் நாள் சிங்க வாகனத்திலும் (அது சமயம் பெருமாள் கருட வாகனத்திலும்)
ஐந்தாம் நாள் கமல வாகனத்திலும்
ஆறாம் நாள் யானை வாகனத்திலும்
ஏழாம் நாள் (இரவில் மட்டும்) பல்லக்கிலும்
எட்டாம் நாள் குதிரை வாகனத்திலும்
அம்பாள் வீதி உலா வருவார்.  இவை அனைத்தும் திருக்கோயில் உள்ளேயே அகன்ற சுற்றுப் பிரகாரத்தில்  நடைபெறும் 
ஒன்பதாம் நாள் அதாவது திருவாடிப் பூரத்தன்று திருத்தேரில் அம்பாள் உலா வருவார்.
பத்தாம் நாள் இரவு கொடியிறக்கம் நடைபெறும். அது சமயம் அம்பாள் பூப்பல்லக்கில் பவனி வருவார். 


நான்காம்  நாள்  அன்று  தாயார் பெருமாள் காட்சி கொடுக்கும் இந்த வீடியோ என்னால் எடுக்கப் பட்டது, பார்த்து மகிழுங்கள்:








12.08.2010 (வியாழன்) அன்று  திருவாடிப் பூரம். எல்லா நலமும் வளமும் பெற்று இவ்வுலக மக்கள் அனைவரும் வாழ எல்லாம் வல்ல அந்த திவ்ய தம்பதிகளை வேண்டிக் கொள்கிறேன்.




 

Tuesday, August 10, 2010

'99 - சில நடப்புகள்

'99-ஐ என்னால் மறக்கவே முடியாது. அந்த வருடம் நடந்த சில நிகழ்வுகள்:-

  • ஒரு ஒட்டு குறைந்ததால் பா.ஜ.க.ஆட்சி கவிழ்ந்தது.
  • நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா பாகிஸ்தான் இடையே பேருந்து விடும் ஐடியா செயல்படுத்தப் பட்டது.
  • பதிலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளை கார்கில் எல்லையில் நுழைய விட்டது.
  • நமது விமானம் ஒன்று தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஒரு பயணியை சுட்டுக் கொன்றார்கள்.
நல்ல செய்தியே இல்லையா என்று கேட்கிறீர்களா?
அந்த வருடம் தான் எனக்கு திருமணம் நடந்தது.

எல்லாம் சரி, 99-ஐப் பற்றி இப்போது ஏன் எழுதுகிறேன் தெரியுமா? இது என் 99-வது பதிவு.


டிஸ்கி : இதுக்கே இப்படி மூச்சு வாங்குதே, நூறாவது பதிவுக்கு என்ன செய்யப் போகிறேனோ, தெரியலையே, எல்லாம் அந்த ஆண்டவன்தான் வழி காட்டணும்.

Sunday, August 8, 2010

ஜோடி No. 1

சமீபத்தில் ஒரு கல்யாணத்துக்கு சென்றிருந்தேன்.

எல்லோரும் மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்க,

எனக்கு மட்டும் அங்கிருந்த பல ஜோடிகளில் ஒரு ராஜஸ்தான் ஜோடி தனியாக பார்ப்பதற்கே அழகாக தோன்றியது.

அந்த ஜோடியை ஒரு புகைப்படமும் எடுத்து கவனமாகப் பாதுகாத்து வருகிறேன்.

உங்கள் பார்வைக்கு இங்கே அந்தப் படத்தைப் போட்டிருக்கிறேன் ஜோடிப் பொருத்தம் சூப்பர் தானே?
:
:
:
:
:
:
:
:
:
:
:


Saturday, August 7, 2010

எந்திரன் - சில பஞ்ச் டயலாக்ஸ்

நம்ம கோகுலம் வெங்கட் எந்திரன் படத்தில ரஜினி பேசக் கூடிய பஞ்ச் டயலாக் கொஞ்சம் எழுதியிருக்காரு, ஏதோ எனக்கு தோணின சில டயலாகுகள் இதோ:
1. என் password.......... தனீ pasword! hack பண்ணாத!

2. save ஆவறது delete ஆவாது, delete ஆவறது save ஆவாது!

3. I can talk JAVA, walk JAVA, laugh JAVA!

4. கண்ணா, இது நான் பலான site போயி சேத்த virus  இல்ல, தானா வந்த virus!

5.ஐ லவ் யு, ஏன்னா நீதான் என் CPU

6 . ஆண்டவன் கெட்டவங்களை ஒரே நாள்ல   நிறைய பதிவு எழுத விடுவான், ஆனா பின்னூட்டம் போட மாட்டான், நல்லவங்களை ஒரு பதிவுதான் எழுத விடுவான், ஆனா நிறைய பின்னூட்டம் கிடைக்க வைப்பான்.

டிஸ்கி : கடைசி பஞ்ச் டயலாகைப் படிச்சீங்கல்ல? என்னை நல்லவனாக்கறதும் கெட்டவனாக்குறதும்  உங்க கையில்தான் இருக்கு.

Friday, August 6, 2010

ஆணென்ன ..........பெண்ணென்ன?

மாதவனின் இந்தப் பதிவில் உள்ள முதல் இரண்டு விளம்பரங்களே இந்தப் பதிவுக்குக் காரணம்.

எனக்கு இரண்டாவதாகவும் ஒரு பெண் குழந்தை பிறந்த நேரம் அது. எனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு SMS அனுப்பினேன் அதில் இருந்த வாசகம் கீழே:-
Blessed with yet another Mahalakshmi. Normal delivery, mother & child safe.

இதைப் படித்துவிட்டு எல்லோரும் என்னை பாராட்டினார்கள். இரண்டும் பெண் குழந்தையாயிற்றே என்று வருத்தப் படாமல் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்ட என் விவேகத்தை பெரிதும் கொண்டாடினார்கள். என் மனைவிக்கு முதலில் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் குறுகிய காலத்திலேயே மனம் மாறி விட்டாள்.  ஆனால் இப்போது கூட யாராவது என்னிடம் எத்தனை குழந்தைகள் என்று கேட்கும்போது இரண்டு பெண்கள் என்று சொல்லிவிட்டால் போதும், உடனே "அடப் பாவமே!என்னப்பா இப்படி ஆகிவிட்டதே!" என்று "உச்" கொட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. பெண்கள் நன்கு படிக்கிறார்கள், குடும்பப் பொறுப்பு உணர்ந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இன்னும் பழைய காலத்திலேயே இருக்கும் இவர்களை எப்படித் தான் திருத்துவது? இன்னும் சொல்லப் போனால், இப்போது திருமணத்துக்குப் பெண் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் பெண் சிசுக் கொலைகள் நடந்ததாலேதான் இப்போது இந்தச் சூழல் இருக்கிறது.
மக்களே, இனியாவது நடைமுறையைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படியே இல்லாவிட்டாலும், பெண் குழந்தைகளை (மட்டுமே) பெற்றவர்களை புண் படுத்துவது போல பேசாதீர்கள்.

டிஸ்கி : SMS அனுப்பினேன் என்று சொன்னேன் அல்லவா? அப்போது என் நண்பன் ஒருவன் என்னை இப்படி கிண்டலடித்தான், "உன்னோட விவேகம் புல்லரிக்குது, ஆனா ஒண்ணு, அஷ்டலக்ஷ்மிகளுக்கு ஆசைப் படாம இருந்தா சரி"

 

Sunday, August 1, 2010

விருப்பமுடன் சொல்கிறேன் (ஒரு சுய விளம்பரம்தான்.....)


இது ஒரு தொடர்பதிவு. அழைத்த ப்ரியமுடன் வசந்த்துக்கு நன்றி!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பெயர் சொல்ல விருப்பமில்லை (அட அதுதாங்க பதிவுலகத்தில் என் பெயர்!)

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

நிச்சயமாக அந்தப் பெயர் உண்மைப் பெயர் இல்லை. கொஞ்சம் வித்தியாசமாக பெயர் இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் அப்படி வைத்தேன். முதலில் சொல்ல விருப்பமில்லை என்றுதான் பெயர் வைத்திருந்தேன். ஆனால் "சொல்ல விருப்பமில்லை said" என்று வந்தால் லாஜிக் ஒத்து வரவில்லை, எனவே பெயர் சொல்ல விருப்பமில்லை என்று வைத்து விட்டேன்.


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அது ஒரு அருமையான இரவு. இந்த இரவிலே திடீரென்று ஒரு தேவதை வானில் தோன்றி என் முன்னே வந்து தமிழ்ப் பதிவுலகில் என் சேவை மிகவும் தேவை என்று கூறி..................
என்றெல்லாம் சொன்னால் நம்புவீர்கள், இருந்தாலும் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. 2005 முதல் பலருடைய பதிவுகளையும் படித்து comments மட்டும் போட்டு வந்த நான் திடீரென்று 2009 தீபாவளி அன்று என் முதல் பதிவை எழுதினேன். 
  
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என்னுடைய ஆதர்சன வலைப் பதிவு இட்லிவடை தான். அதில் வரும் பதிவுகளை எல்லாம் படித்த நான், என் பதிவுகளும் எல்லோரையும் எட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டதென்னவோ நிஜம்தான்.  ஆனால் நான் பிரபலம் அடைவதற்கு என்று தனியாக எதுவும் செய்ய வில்லை. என் மனத்தில் தோன்றிய எழுத்துகளை என் பதிவில் எழுதினேன். ஆனால் பிறருடைய பதிவுகளை நிறையப் படித்து அங்கங்கே எனக்குத் தோன்றிய கமெண்ட்ஸ் எழுதினேன். கொஞ்சம் வித்தியாசமான பெயர் என்பதாலோ என்னவோ, என் வலைப்பூ ஓரளவு புதிய ஆதரவாளர்களைச் சம்பாதித்தது. தமிளிஷ்ல என் பதிவுகளை இணைத்ததன் மூலமும் ஓரளவு பிரபலம்(?!) ஆகியிருக்கேன்
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய எழுதியிருக்கேன். என் பெற்றோரைப் பற்றியும், என் அண்ணனைப் பற்றியும் எழுதினேன். எங்கள் பள்ளியில் நாங்கள் வெள்ளி விழா கொண்டாடியது பற்றியும் எழுதினேன். இது எனக்கு மன நிறைவைத் தந்ததோடு அல்லாமல், நிறைய பின்னூட்டங்கள் இந்த வகைப் பதிவுகளில் எனக்கு வந்தன.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

"இது பொழுது போக்கும் பதிவு அல்ல, நம் நாட்டின் பழுது போக்கும் பதிவு" என்றெல்லாம் கப்சா விட நான் தயாரில்லை. அதே நேரத்தில் சம்பாதிப்பதற்காகவும் தான் எழுதுகிறேன். அதாவது, மக்களின் மனங்களை சம்பாதிப்பதற்காக.........(மனசைத் தொட்டுட்டேனா?

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒரு பதிவுக்குத் தான் சொந்தக்காரன். என்றாலும், இது உங்கள் சொத்து என்ற லாஜிக் படி, எங்கள் கிரியேஷன்ஸ்  வலைதளத்தில் சில படங்களை வரைந்து அதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள். எங்கள் ஊர்த் திருவிழாவைப் பற்றி இட்லிவடையிலும் எழுதியிருக்கிறேன்.  

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அவரவர் கருத்துகளை அவரவர் பாணியில் சொல்கிறார்கள், இதில் கோபப் பட நியாயமில்லை. ஆனால் பொறமை,எஸ், நிறையவே உண்டு, குறிப்பாக, இட்லிவடை, கோகுலத்தில் சூரியன் வெங்கட்  ப்ரியமுடன் வசந்த், இன்னும் நிறைய இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி என் டாப் 10௦ வலைப்பதிவர்கள் என்ற பதிவிலும் என் டாப் 10௦ பின்னூட்டாளர்கள் என்ற பதிவிலும் பாராட்டியிருக்கிறேன்.  

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல் கமென்ட் போட்டவர் எடக்குமடக்கு கோபி தான். மற்றபடி என்னைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாததால் யாரும் தானாக என்னைப் பாராட்ட வில்லை, ஆனால், நானாகத் தொடர்பு கொண்ட சில பதிவர்கள் இன்றும் என் ரெகுலர் followers லிஸ்டில் இருக்கிறார்கள்.  குறிப்பாக கோகுலத்தில் சூரியன் வெங்கட்  என் எழுத்துகளை விமரிசிக்கும் விதமே தனி. அவை என் எழுத்துகளை ஓரளவு சீர் செய்ய உதவியிருக்கின்றன.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்... 

என் பதிவு டைட்டில் கூறுவதுபோல், நான் எப்போதும் பட்டதைச் சொல்பவன், பட்டென்று சொல்பவன். என் எழுத்துகள் என் சிந்தனையில் தோன்றும் விஷயங்களே தவிர யாரையும் மனம் நோகச் செய்வது என் எண்ணம் அல்ல. முழுக்க, முழுக்க, நகைச்சுவைக்காகவும், பொழுது போக்குவதற்காகவும் மட்டுமே நான் பதிவுலகை பயன்படுத்துகிறேன், பயன் படுத்துவேன். இன்னும் படுத்துவேன்(?!)

இந்தப் பதிவுத் தொடருக்கு நான் அழைக்கும் பதிவர்கள் :



(என்னை ரெண்டு பேரும் வெவ்வேறு தொடர்களில் மாட்டிவிட்டதால் அவர்களை அழைக்கிறேன்!)