அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, January 31, 2011

வாரச் சந்தை - 31.01.2011

ஒரு தத்துவம்

முட்டாளும் புத்திசாலியும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள், எப்போது செய்கிறார்கள் என்பதில்தான் வித்தியாசம்.

ஒரு பொன்மொழி

வாழ்வில் உயர்வு பெற உழைப்பைவிட சிறந்த ஒன்று இருக்கிறது, அது..............
கடின உழைப்பு.

ஒரு கவிதை 

விண்ணில் சீறிப் பாய்ந்த
ராக்கெட் நினைத்தது,
"நம்ம அளவுக்கு  
பறக்கவும் முடியுமா?"
நினைப்பில்
மண்ணைப் போட்டது
விலைவாசி!

ஒரு ஜோக்

பேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: "டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா?"
டாக்டர் சொன்னார் "ஓ, நிச்சயம் முடியும்"
பேஷன்ட் "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது".

Saturday, January 29, 2011

யாருக்கும் வெட்கமில்லை

இது துக்ளக் "சோ"வின் பிரபல நாடகத்தின் தலைப்பு. அதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது, நம் தமிழக மீனவர்களின் சோக நிலையைப் பார்க்கும்போது!


நான் ஒன்றும் புதிதாக சொல்லப் போவதில்லை. 

  • தன் குடும்ப நலனுக்காகவும், தனக்கு வேண்டிய இலாக்காக்களைப் பெற வேண்டியும் டில்லி செல்லும் முத்தமிழ் "வித்தவ"ருக்கு 
  • "என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாவேன்.அதில் நீங்களேறிப் பயணம் செய்யலாம்" என்று மக்களுக்கு சொல்லாலேயே தோரணம் கட்டும் "கொலைஞருக்கு"
  •  "இலங்கையில் நடக்கும் சண்டையில் நாம் தலையிட முடியாது, இது இறையாண்மை சம்பந்தப் பட்ட விஷயம்" என்று சமாதானம் சொன்ன திரு"war"ஊர் பிரகஸ்பதிக்கு 
நாம சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. அவர்கிட்ட இதைத் தான் எதிர்பார்க்க முடியும்.
பின்ன, 

  • தா. கிருட்டிணன் கொலையுண்டபோது "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்" என்று சொன்ன
  • தினகரன் அலுவலக எரிப்பில் மூவர் பலியானபோது "அது வெறும் ஆக்சிடென்ட் தான்" என்று சமாளித்த
  • எக்குத் தப்பாய் நிருபரிடம் மாட்டிக் கொண்டபோது "நானும் நீயும் தீக்குளிக்கலாமா?" என்று கோபம் காட்டிய
  • ஆ.ராசா வீட்டில் ரெயிடு நடந்தபோது "உன் வீட்டிலேயா ரெய்டு நடந்துச்சு?" என்று புத்திசாலித் தனமாய் எதிர் கேள்வி கேட்ட
ஒரு பக்கா அரசியல்"வியாதி"இடம் இதை விட எதிர்பார்க்க முடியாது. ஆனால், 
ஒரு ரூபாய் அரிசிக்கும், இலவச டிவிக்கும்(அது இலவசமே இல்லை, நம்ம வரிப்பணமும் குடித்து சீரழியும் மக்களின் பணமும் தான் டிவியாக மாறியது) இன்ன பிற கவர்ச்சி விளம்பரத்துக்கும் மயங்கி அவர்கள் தந்த ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஆசைப்பட்டு அவர்களுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு அவர்கள் இப்படிதான் வேட்டு வைப்பார்கள். 

விடுதலைப்புலிகளை எதிர்க்கிறோம் பேர்வழி என்று இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய மட்டும் எங்களால் முடியும் ஆனால், என் நாட்டு மீனவனை நீ அழிக்க என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்க மட்டும் எனக்கு மனம் வராது என்று இருக்கும் மத்திய அரசின் நிலையை எதிர்த்து  பகிரங்கமாக இந்த இடத்தில என் கோபத்தை பதிவு செய்கிறேன். (கையாலாகாத ஒரு குடிமகன் வேறென்ன செய்ய முடியும்?)

ஒரு பதில் வைத்திருக்கிறார்கள் - இவர்கள் கடல் எல்லையைத் தாண்டினால்தான் இந்த விபரீதமாம்! நான் கேட்கிறேன், ஒரு வாதத்திற்கு சரி என்று கொண்டாலும், அதற்காக அவர்களைக் கைது செய்து நம் நாட்டுத் தூதரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பின் திருப்பி அனுப்புவதுதானே வழக்கம். காலம் காலமாய் நம்மிடம் வாலாட்டும் பாகிஸ்தான் நாட்டு மீனவர்களையே நாம் ஒன்றும் செய்வதில்லையே! நாம் பிறரிடம் மனிதம் காட்டுவோம் ஆனால் நம் மக்களை யார் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டோம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு சீக்கியருக்கு தலைப்பாகை வைப்பதில் பிரச்சினை என்றவுடன் பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்திய மன்மோகன் சிங், ஒரு மலையாளிக்கோ, தெலுங்கருக்கோ, கன்னடியருக்கோ ஏதேனும் பிரச்சினை வந்தால் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் எங்கே, இங்கே என்ன நடந்தாலும் கவலை இல்லை, "நான்-என் குடும்பம்-என்ன ஒரு டீம்!" என்று மகிழ்ந்திருக்கும் முத்தமிழ் வித்தவர்(இங்கே ர் என்ற மரியாதை அவருடைய வயதைக் கருதி மட்டுமே)"கொலைஞர்" தமிழ்"ஈனத்"தலைவர் எங்கே?

ஒரு தமிழன் என்ற முறையில் மட்டுமல்ல, ஒரு மனிதன் என்ற முறையிலாவது யாருக்கும் இங்கே பரிதாபம் காட்டாத இந்த அரசிடம் என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன். 
   

Monday, January 24, 2011

வாரச் சந்தை - 24.01.2011

ஒரு தத்துவம் 

என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை பெய்யும்போது அதை எடுத்துகிட்டு போக முடியாது

ஒரு கவிதை 



இறந்து போன 
அக்பரை மட்டுமல்ல
உயிரோடு இருக்கும் 
தாத்தாவைக் கூட 
போட்டோவில்தான் பார்க்கிறது குழந்தை
தனிக் குடித்தனத்தின் தயவில் 


ஒரு குவிஸ்


ஒரு ஆளு பத்து ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு வாங்கி எட்டு ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு விக்கிறாரு. இருந்தாலும் இந்த வியாபாரத்தால அவர் லட்சாதிபதி ஆயிட்டார். எப்படி? 


(விடை : பின்னூட்டத்துல அனேகமா எல்லாருமே சொல்லிட்டாங்க)

ஒரு பொன்மொழி 


தங்கத்தோட இன்னிய விலை ஒரு கிராமுக்கு 1867 (ஹிஹி...தங்கத்துக்கு "பொன்"னுனு ஒரு பேரு இருக்கில்ல!)

ஒரு ஜோக் 



விஜய டி. ஆர்.: "வருகிற பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லட்சிய தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறும். அது மாநாடு போல பிரமாண்ட பொதுக் கூட்டமாக இருக்கும்"
(இதைவிட ஒரு ஜோக் எனக்கு தோணலை)

Saturday, January 22, 2011

தயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க!

தெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன்?

பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் மேல எல்லாருமே காண்டாத் தான் இருக்காங்க.

அப்படி என்ன அவரு செஞ்சுட்டாரு? ஒழுங்கா நடிக்கத் தெரியலையாம், இருக்கட்டும், அதுனால என்ன? அவரு நிறைய பன்ச் டயலாக் பேசறாராம். அதுனால என்ன? ரொம்ப பில்ட்-அப் கொடுக்கராராம், அதுனாலதான் என்ன?

எல்லாரும் கிண்டல் பண்றாங்க, பரவாயில்ல, இன்னிக்கு வெங்கட் விஜயை ரொம்பவே கேவலப் படுத்திட்டாரு.  அதுனாலதான் எனக்கு கோவம் வந்துடுச்சு. இப்படி ஒரு லெட்டர் உங்களுக்கு எழுதியிருக்கேன்.

என்னை மாதிரி எத்தனை பேரு விஜய் படத்தை ஆர்வமா பாக்கறாங்க, தெரியுமா? எங்க க்ரூப்பே இங்கதான் இருக்கோம். நான் யாருன்றீங்களா? நான் "சுறா" படத்தை எட்டு தடவை பார்த்தவன். என்ன ஆச்சரியமா பாக்கறீங்க? எனக்குப் பக்கத்துக்கு "பெட்"ல இருக்கறவரு "வீராசாமி" படத்த ரெண்டே தடவைதான் பார்த்தவரு.

கொஞ்சம் இருங்க, டாக்டர் ரவுண்டு வர நேரமாம், அப்புறம் உங்ககிட்ட பேசறேன்!

அன்புடன்


விஜய் வெறியன்
பெட் எண்: 6
மருத்துவக் கல்லூரி
கீழ்ப்பாக்கம் 

டிஸ்கி: வாரச் சந்தை திங்கள் அன்று வெளிவரும்.

Sunday, January 16, 2011

2010-ல் நான் (தொடர்பதிவு )

இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த மாதவன் அவர்களுக்கு நன்றி!

என்னைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகும். 2009-லேயே  பதிவு எழுத வந்துவிட்டாலும், முனைந்து எழுதியது சென்ற ஆண்டில்தான். அது மட்டுமில்லாமல், வெங்கட், மங்குனி அமைச்சர், ரமேஷ், இம்சை பாபு டெரர் பாண்டியன்(VAS), பன்னிகுட்டி ராமசாமி, அருண், எஸ்கே, சௌந்தர், போன்ற பல பதிவர்கள் நட்பு கிடைத்ததும் சென்ற ஆண்டில்தான். சாட்டில் மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த இவர்களுடன் சேர்ந்து டெரர் கும்மி ப்ளாக் ஆரம்பித்தது நிலைத்து நிற்கும் சந்தோஷம்.ஒரு படி மேல் போய், ரமேஷையும் பாபுவையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

நான் பெரிதும் மதிக்கும் தண்டோரா மணிஜீ அவர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்னொரு சந்தோஷம்.

தனிப்பட்ட முறையில் என் பள்ளித் தோழர்களை இருபத்தைந்தாண்டுகள் கழித்து சந்தித்தது மிகப் பெரிய சந்தோஷம்.

ஆனால், மன வருத்தங்களும் இருக்கத் தான் செய்கிறது. ஊழலில் உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு "சாதனை" செய்யப் பட்டதும், விலைவாசி என்பது பொருட்களின்  விலையை வாசிக்க மட்டும் முடியும், எதையும் வாங்க முடியாது என்ற அளவில் இருப்பதும் சில பதிவர்களின் அடாவடிச் செய்கைகளால் மணம் புண் பட்டதும் என்று மைனஸ்களும் வந்து போயின.

இனி வரும் ஆண்டுகளிலாவது ஒரு சாதாரண மனிதன் நல்ல முறையில் வாழ வழி ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன்.

Saturday, January 15, 2011

வாரச் சந்தை - 5

முன் டிஸ்கி: என்ன கொடுமை சார் இது, என்னோட பதிவு பிடிக்கலைனா அதுக்காக என்னோட ஆணிய அதிகமாக்கி என்னை ப்ளாக் பக்கமே வர விடாம பண்ணிட்டாங்களே! நாங்க யாரு, வந்துட்டோமில்ல?


அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!


ஒரு தத்துவம் 


நட்புங்கறது ஒயின் மாதிரி, எவ்வளவுக்கெவ்வளவு பழசா இருக்கோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லா இருக்கும்.

ஒரு கவிதை 






என்ன ஒண்ணுமே இல்லைன்னு பாக்கறீங்களா? மௌனத்தின் சிறப்பை கவிதையாய் சொல்லியிருக்கிறேன் அதெல்லாம் முடியாது, கவிதை நிச்சயமா வேணும்னு ஆசைப்பட்டா:
கரும்பின் இனிமையும் 
மஞ்சளின் செழுமையும்
அரிசியின் வளமையும்
வாழையடி வாழையாக
உங்கள் இல்லங்களில் சிறக்க
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்! 


ஒரு குவிஸ்
Examக்கும் குவிஸ் போட்டிக்கும் என்ன வித்தியாசம்?


Exam-ல கேள்விக்கு பதில் தெரிஞ்சாதான் pass. குவிஸ் போட்டில, பதில் தெரியலேன்னா, "pass" (கேள்வி அடுத்த டீமுக்கு pass பண்ணப்படும்)

ஒரு பொன்மொழி 

முட்டாள்கள் விமரிசனங்களுக்கு பதில் சொல்கிறார்கள்,
புத்திசாலிகள் வென்று காட்டுகிறார்கள்.


ஒரு ஜோக் 

ஒரு அம்மா மகனிடம் கேட்டாள், "திப்பு சுல்தான் யாரு தெரியுமா?"
மகன்: "தெரியலை"
அம்மா : "அதுக்குதான் பாடத்தில கவனம் வேணும்னு சொல்றேன்".
மகன்: "உனக்கு ஜோதி ஆண்ட்டி யாருன்னு தெரியுமா?"
அம்மா : "தெரியலையே"
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்"

Saturday, January 1, 2011

வாரச் சந்தை - 4

எல்லா உயிரும்
இன்பமாய் வாழ
பொல்லாத் துயரம்
பூண்டோடு ஒழிய
நல்லார் எவரும்
என்று
நானிலம் செழிக்கட்டும்
இன்று
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த வாரச் சந்தைக்குப் போவோமா?

ஒரு தத்துவம்
ஒரு விஷயத்தை மட்டும் பாத்துட்டு மத்ததும் அப்படியே தான் இருக்கும்னு நினைக்கவே கூடாது. உதாரணத்துக்கு வெங்காய போண்டாவுல வெங்காயம் இருக்குங்கறதுக்காக மைசூர் போண்டாவுல போய்  மைசூரைத் தேடக் கூடாது.

ஒரு (யதார்த்த)கவிதை 

உயிரே
உயிரின் உயிரே
நீயின்றி நானில்லை
என்றெல்லாம் சொன்னவன்
காணாமல் போனான்
"எப்போது கல்யாணம்?"
என்றபோது!
ஒரு பொன்மொழி

வெற்றியை தலைக்கும் தோல்வியை இதயத்துக்கும் எடுத்துச் செல்லவே கூடாது; முன்னது தலைக் கணத்தை உருவாக்கும், பின்னது தற்கொலைக்குத் தூண்டும்! 
ஒரு (மொக்கை) குவிஸ்


ஏழு போட்டு நான்கு பூஜ்யம் சேர்த்தால் ஏழாயிரம் ஆகும், எப்படி?
ஏழுக்கு முன்னால் ஒரு பூஜ்யமும் பின்னால் மூன்று பூஜ்யமும் போட்டால் போதும்.
07000   ஹிஹி!
ஒரு (பழைய) ஜோக்
நடிகையின் அம்மா : நீ நடிகர் வேணுகாந்த்தை லவ் பண்றியாமே, அப்படியா?
நடிகை : இல்லவே இல்லை, அவரை என் அண்ணனாத் தான் நினைக்கிறேன்!
நடிகையின் அம்மா : அப்படியே நினைச்சுக்கோ, ஏன்னா, நான் அவரோட அப்பாவை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேன்

ஒரு (பதில் சொல்லவே முடியாத) கேள்வி

நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா:?
(ஆமாம்னு சொன்னா, ஏற்கெனவே திருடினத்தை ஒப்புக் கொண்டதுபோல் ஆகும். இல்லை என்று சொன்னால், இன்னமும் திருடிக் கொண்டிருப்பதுபோல் ஆகும்)