அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, March 15, 2012

மகளிர் தினம் - கவிதை

எங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே:

பெண்ணிற் பெருந்தக்க யாவுள
இது
பொய்யாமொழிப் புலவனின் வாக்கு
பொருள் பொதிந்த பொருத்தமான வாக்கு

அகிலத்தையே ஆளும் ஈசனும்
அம்மைக்குள் அடக்கம்
இது
அவ்வையின் தமிழ் பாட்டு
இதற்குண்டோ ஒரு எதிர் பாட்டு?
பெண்ணின் பெருமையை
எண்ணிடத் துணிந்தேன்
என்னே என் மடமை!
பேராழியின் அலையை
எண்ணிடத் துணிந்தால்
இதுவும் சாத்தியமே!

அன்னையாய் வந்து
என் பசி தீர்த்தது ஒரு பெண்
அருந்தமிழ் வந்து
கற்பித்ததும் ஒரு பெண்
சிறுபிள்ளை விளையாட்டிலே
ஆனந்தம் தந்தது ஒரு பெண்
சீரான கல்லூரி வாழ்வில்
நட்பின் இலக்கணம் வகுத்தது ஒரு பெண்
தமக்கையாய், தங்கையாய்
உறவின் பெருமை தந்தது ஒரு பெண்
வாழ்வில் வளம் பொங்க
வாழ்க்கை நலம் சிறக்க
வந்தாள் குலம் விளங்க
ஒரு பெண் -என் மனைவியாய்
தந்தாள் குலம் சிறக்க
இரு பெண்கள் - குழந்தைகளாய்
இப்படி
என்னை சுற்றி
எத்தனைதான்  பெண்கள்
அவர்களே
என் அறிவுக்கண் திறந்த கண்கள்
பெண்கள் வீட்டின் கண்கள்
அல்ல
அவர்கள் நாட்டின் கண்கள்
பெண்மையைப் போற்றுவோம்
பெண்மையைப் போற்றுவோம்
நாட்டின் நன்மையைக் கருதினால்
பெண்மையைப் போற்றுவோம்