அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 24, 2012

வைகுண்ட ஏகாதசி


இன்று (24.12.2012) எல்லா வைணவக் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி என்னும் புண்ணிய தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. பரமபத வாசல் திறப்பு என்னும் வைபவமும் நடைபெறுகிறது. பலரும் அதை சொர்க்க வாசல் திறப்பு என்றே கூறி வருகிறார்கள்.

இது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.



அருள்மிகு அரங்கநாதர்,
பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கத்தில் 
அது சொர்க்க வாசல் அல்ல, பரமபத வாசல். வைணவ சித்தாந்தப்படி, புண்ணியம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் சுவர்க்கம். பாவம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் நரகம்.

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.
சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.

அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா என்பது இருபது நாட்கள் கொண்டாடப் படுவது. முதல் பத்து நாட்கள் "பகல் பத்து" என்றும் இரண்டாம் பத்து நாட்கள் "ராப்பத்து" என்றும் சொல்வார்கள். பகல் பத்து என்கிற முதல் பத்து நாட்களில் பெரியாழ்வார்,ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார்,  திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் பிரபந்தங்களும் "ராப்பத்து" என்கிற இரண்டாம் பத்து நாட்களில் நம்மாழ்வாரின் பிரபந்தமும் கோயில்களில் ஓதப்படும்.

இந்த இராண்டாம் பத்தின் முதல் நாளே "வைகுண்ட ஏகாதசி" என்று கொண்டாடப் படுகிறது. (இன்னும் நிறைய சொல்லலாம், இருந்தாலும் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்)

வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் எல்லா வைணவ அன்பர்களுக்கும் என்னுடைய வைகுண்ட ஏகாதசி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எண்ணப் படி, இந்த பூவுலகை நீக்கும் காலம் வரும்போது, அந்த எம்பெருமானின் திருப்பாதங்களில் சேவை செய்யும் பாக்கியத்தை உங்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் அருளட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.

அதே சமயம், இந்தப் பூமியில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் வறுமை விட்டு வளமை பெற்று பெருமையோடு வாழ அந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரியவேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.

கொஞ்சம், எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்!

டிஸ்கி : ஏற்கெனவே போட்ட பதிவையே கொஞ்சம் மாற்றி இந்த வருடமும் மீள்பதிவாகப் போட்டு விட்டேன் (நல்லதை எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா)